சினிமாவில் பிரபல சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன். இவர் பாஜகவில் இணைந்து அக்கட்சி கூட்டங்களில் பங்கேற்று வரும் நிலையில், கடந்த 30ஆம் தேதி மதுரவாயல் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எதிரே இருக்கக்கூடிய பெரியார் சிலை குறித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்தது.
திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியோர் தரப்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் கடந்த 3 ஆம் தேதி சென்னை சைபர் கிரைம் போலீசார் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். கலகம் செய்யத் தூண்டுதல், அவதூறு செய்தி மூலம் பொதுமக்களிடையே விரோதத்தைத் தூண்டுவது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாஜகவின் ஹெச்.ராஜா, ''இந்து முன்னணியின் உரிமை மீட்பு மாநாட்டில் பேசிய திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் ஒரு கருத்து தெரிவித்துள்ளார். உடனே பார்த்தால் 12 போலீஸ் அவரது வீட்டிற்கு சென்றுள்ளது மிரட்டுவதற்கு. ஆனால் நடராஜை இழிவுபடுத்தி யூடியூப் சேனலில் பேசியவரின் வீட்டிற்கு செல்ல போலீசாருக்கு பாதை தெரியவில்லையா? ஆண்டவனை இழிவா பேசலாம் முந்தாநாள் பிறந்து இறந்த மனிதனை இழிவாக பேசக்கூடாதா? இதில் என்ன தவறு இருக்கிறது. இந்துக்கடவுள் நடராஜரை இழிவுபடுத்தி யூடியூப் சேனலில் பேசியவரை கைது செய்ய துப்பில்லாத, வக்கில்லாத, திராணி இல்லாத, துணிச்சல் இல்லாத காவல்துறை கனல் கண்ணன் வீட்டிற்கு போனது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆயிரம் கனல்கண்ணன் அதே கருத்தை சொன்னால் என்ன செய்வீர்கள். எனவே தேசியவாதிகளுக்கு எதிரான கருத்துக்களை நிறுத்திக்கொள்ள்ளுங்கள '' என்றார்.