பிரதமர் நரேந்திர மோடி இன்று தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வருகைதந்தார். ஜிப்மரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். காரைக்கால் - நாகப்பட்டினம் மாவட்டத்தை உள்ளடக்கிய ரூ.2,426 கோடி மதிப்பிலான என்.எச். 45 நான்கு வழிச்சாலை திட்டம், காரைக்காலில் ரூ.491 கோடி மதிப்பில் புதிய ஜிப்மர் வளாகம் கட்டுவதற்கான பணி, சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் சிறிய துறைமுகம் அமைத்தல், புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டுத் திடலில் ரூ.7 கோடியில் செயற்கை ஓடுதளம் அமைத்தல் ஆகிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும், ஜிப்மரில் ரூ.28 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ஆய்வுக் கூடத்தையும், லாஸ்பேட்டை பகுதியில் இந்திய விளையாட்டு ஆணையத்தால் ரூ.11.85 கோடியில் கட்டப்பட்டுள்ள 100 படுக்கை வசதியுடன் கூடிய மகளிர் விடுதியையும், புதுச்சேரி கடற்கரை சாலையில் ரூ.14.83 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட மேரி கட்டிடத்தையும் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி, “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றையவை” என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி உரையாற்றினார். அவர் பேசும்போது, “கடல்சார் நீலப் பொருளாதாரத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. புதுச்சேரி இளைஞர்களுக்கு சரியான ஆதரவு தேவை. அதற்காக வேலைவாய்ப்பில், தகவல் தொழில்நுட்பத் துறை, மருந்து துறை, நெசவு உள்ளிட்ட துறைகளில் மேம்பட மத்திய அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்த இருக்கிறது. கல்வியில் பிறமொழி ஆதிக்கம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆகவே மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் உள்ளூர் மொழியில் கற்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் பயன்பெறுவார்கள்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஜிப்மரில் இருந்து கார் மூலம் லாஸ்பேட்டை மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்றார்.