அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் எழுந்து, அதனைத் தொடர்ந்து பொதுக்குழுக் கூட்டமும் நடைபெற்று முடிந்த நிலையில், ஓபிஎஸ்-இபிஎஸ் பிளவு காரணமாக அது தொடர்பான சிக்கல்கள் தற்பொழுது வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.
அதிமுகவில் ஒருபக்கம் பூசல்கள் நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், 'புரட்சி பயணம்' என்ற பெயரில் சென்னை தியாகராய நகரிலிருந்து சசிகலா பயணம் ஒன்றை தொடங்கியுள்ளார். அதன்படி திருத்தணி சென்ற அவர் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நீங்கள் வந்தால்தான் பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இருக்கும் என்றுதான் என்னுடைய சுற்றுப்பயணங்களில் தொண்டர்கள் அதிகம் வலியுறுத்துகிறார்கள். நிச்சயமாக அதிமுக ஆட்சியை அமைப்பேன். அது மக்களின் ஆட்சியாக இருக்கும். எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு இதே மாதிரி ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அதை என்னுடைய சின்ன வயதிலேயே பார்த்து வந்தேன். எனவே என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு இரண்டாவது முறை இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையும் சரி செய்ய முடியும்.
என்னைப்பொறுத்தவரை கழகத் தொண்டர்களும், வாக்களிக்கும் பொதுமக்களும்தான் என்னுடன் இருக்கிறார்கள். அதனால் நிச்சயமாக இதை சரிசெய்து மீண்டும் அதிமுக ஆட்சியைக் கொண்டு வந்துவிடுவேன். அது ஏழைகளின் ஆட்சியாக, மக்களின் ஆட்சியாக இருக்கும். அதிமுகவை காக்கும் பொறுப்பு எனக்கும் உள்ளது. மனநிலை மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் அதேசமயம் இதையும் சரி பண்ண முடியும் என்ற தைரியம் என்னிடம் இருக்கிறது. அதை நிச்சயம் செய்வேன். கழகத் தொண்டர்களின் துணையோடு நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். இது எங்களுக்குள் உள்ள பிரச்சனை இதனை சரிசெய்து கொள்வது எங்களுடைய எண்ணம். ஜெயலலிதா இருந்திருந்தால் இது போன்ற நிலை அதிமுகவிற்கு வந்திருக்காது'' என்றார்.