தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் நடத்தி வருகின்றனர். இருப்பினும் தொகுதிப் பங்கீடு இறுதியாகாமல் இழுபறி நிலையே நீடிக்கிறது.
இந்த நிலையில்தான், கடந்த மாதமே தனது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் தலைமை, இப்போது ஒரே மேடையில் வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளது. மற்றொரு பக்கம் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கி கலக்கி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருச்செல்வத்தை ஆதரித்து, தொகுதி முழுவதும் சுவர் விளம்பரங்களைச் செய்து வருகிறார்கள் சீமானின் தம்பிகள். இந்த நிலையில், இன்று (04/03/2021) தனது முதல் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை வேட்பாளர் திருச்செல்வம் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்டக் களத்தில் உள்ள சிவன் மற்றும் நாடியம்மன் ஆலயங்களில் துண்டுப்பிரசுரங்கள் வைத்து வழிபட்டபிறகு சக தோழர்களுடன் அங்கிருந்து பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
அதைத் தொடர்ந்து போராட்டம் நடந்த ஆலமரத்தடியில் அமர்ந்திருந்த பெண்களிடம் துண்டறிக்கைக் கொடுத்து 100 நாள் வேலையை 150 நாட்களாக்குவோம். ஆடு, மாடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம். விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்போம். வெல்லப் போறான் விவசாயி என்று கூறி வாக்குச் சேகரிப்பைத் தொடங்கி கிராமம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
"நாடியம்மன் கோயில் திடலில் தொடங்கிய போராட்டம் வெற்றி பெற்றது போல, எங்கள் பிரச்சாரமும் இங்கிருந்து தொடங்கியதால், எங்களுக்கு வெற்றி நிச்சயம்" என்றார்கள் நாம் தமிழர் கட்சியினர்.