தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிந்திருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் அடுத்தகட்ட வேலையான தேர்தல் பரப்புரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தங்கள் கட்சி சார்பில் விண்ணப்பித்தவருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் அவருடைய டிவிட்டர் பக்கத்தில், 'பனைமரத்துப்பட்டி ஒன்றிய 9வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விண்ணப்பித்திருந்த பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் உள்ளூர் திமுக பிரமுகரால் அச்சுறுத்தப்பட்டு வேட்புமனுவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை' எனப் பதிவிட்டுள்ளார்.