"அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா ஜெயலலிதாவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்" என்ற அறிக்கையின் வாயிலாக சசிகலா தனது அரசியல் விலகலை அறிவித்துள்ளார்.
சசிகலாவின் திடீர் அறிவிப்பு தமிழக அரசியல் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சசிகலாவின் அறிவிப்புக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், "அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலாவின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடையும் வகையில் சசிகலா தனது முடிவை அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சி வரக்கூடாது என நினைப்பவர் டிடிவி.தினகரன். ஜெயலலிதாவின் விசுவாசியாக இருப்பதாக சசிகலா கூறியது மகிழ்ச்சிதான். அ.தி.மு.க.வில் சசிகலா சேர்க்கப்படுவாரா? என்ற கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்லும்" என்றார்.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, "அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவித்ததை வரவேற்கிறேன். சசிகலா அதிக அரசியல் அனுபவம் பெற்றவர்; ஆனால் ஆளுமை என்று சொல்ல முடியாது. பீகாரில் நிதீஷ்குமாரை இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிட்டு பா.ஜ.க. முதல் நிலைக்கு வந்துவிட்டது. பா.ஜ.க.விடம் சிக்காமல் இந்த முடிவை சசிகலா எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது" எனத் தெரிவித்தார்.
பா.ஜ.க.வின் மாநிலப் பொதுச்செயலாளர் சீனிவாசன் கூறியதாவது, "அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவித்ததை வரவேற்கிறேன். சசிகலா எடுத்த முடிவை தினகரனும் எடுக்க வேண்டும்" என்றார்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனரும், எம்.எல்.ஏ.வுமான தனியரசு கூறியதாவது, "அரசியலை விட்டு ஒklதுங்குவதாக சசிகலா அறிவித்தது வருத்தம் அளிக்கிறது. பதவி, அதிகாரத்திற்காக சசிகலா ஆசைப்படுவதாக விமர்சனம் செய்தார்கள்" எனத் தெரிவித்தார்.
சசிகலாவுக்கு குறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கி இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்துள்ளது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.