அதிமுகவில் எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கும் வன்னியர் சமூக தலைவர்களில் மிக முக்கியமானவர் தமிழக சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை அதிகாரப்போட்டியில், எடப்பாடிக்கு ஆதரவாக உரத்து குரல் எழுப்பியும் ஆதரவாகவும் இருந்து வருபவர். அண்மையில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த 2 இடங்களில் 1 இடத்தை சண்முகத்துக்கு ஒதுக்கினார் எடப்பாடி. விரைவில் ராஜ்யசபா எம்.பி.யாக நாடாளுமன்றத்துக்குள் நுழையவிருக்கிறார் சண்முகம்.
இந்த நிலையில், கடந்த 23-ந் தேதி நடந்த பொதுக்குழுவில், அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகின்றன என ஆவேசமாக கூறி பொதுக்குழுவில் சண்முகம் ஏற்படுத்திய பரபரப்பு அடேங்கப்பா ரகம்! பொதுக்குழு களேபரங்களைத் தொடர்ந்து, சில நாட்களாக சண்முகத்தின் சத்தத்தையே காணவில்லையே என்று எடப்பாடி தரப்பில் நாம் விசாரித்தபோது, "நீதிமன்றத்தில் சட்டரீதியாக தங்கள் தரப்பு (எடப்பாடி) ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அந்த பணிகளில் சீரியசாக இருக்கிறார். அதனால் அவர் அமைதியாக இருப்பது போல தெரிகிறது" என்கின்றனர்.
ஒ.பி.எஸ் தரப்பில் விசாரித்த போது, "பொதுக்குழுக்கு பிறகு பதவிகளை கைப்பற்றுவதில் எடப்பாடிக்கும் சண்முகத்துக்குமிடையே மோதல் வெடித்துள்ளது. அதனால், மனவருத்தத்தில் சண்முகம் இருக்கிறார்" என்று சொல்கின்றனர்.
இதற்கிடையே சண்முகத்தை மையப்படுத்தி, தமிழக பாஜகவில் முக்கிய தகவல் ஒன்று பரவி வருகிறது. இது குறித்து நாம் விசாரித்தபோது, "தமிழகத்திலுள்ள பெரும்பான்மை சமூக தலைவர்களை பாஜக பக்கம் இழுப்பது என்கிற அசைன்மெண்ட் தமிழக பாஜக எப்போதோ தொடங்கிவிட்டது. இதில் சில வெற்றிகளும் உண்டு; தோல்விகளும் உண்டு. இந்த நிலையில்தான், அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் சி.வி.சண்முகம். அவர் எம்.பி. ஆனதிலிருந்தே அவர் மீது பாஜகவுக்கு ஒரு கண் இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், சண்முகத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் தமிழக பாஜகவில் பொறுப்பில் இருக்கிறார். அமைச்சராக சண்முகம் இருந்த காலத்தில் அரசு பதவியில் அந்த நண்பர் இருந்திருக்கிறார். அந்த பதவி காலம் முடிந்ததும் அவர் பாஜகவில் இணைந்துவிட்டார். அந்த நண்பர் மூலமாக சண்முகத்தை பாஜக அணுகியுள்ளது. சண்முகத்திடம், 'பாஜகவுக்கு வந்துவிடுங்கள். மத்திய அமைச்சராகிவிடலாம். அதற்கு நாங்கள் கேரண்டி' என சொல்லப்பட்டிருக்கிறது. சண்முகத்திடமிருந்து பாசிட்டிவ் பதில் வரவில்லை" என்று விவரிக்கிறது பாஜக வட்டாரம்.
ஆக, அமைச்சர் என்ற தூண்டிலை வீசி சண்முகத்தை வளைக்கத் துடிக்கிறது பாஜக. ஆனால், சண்முகத்தின் ஆதரவாளர்களோ, "எங்கள் அண்ணன் மீன் அல்ல; திமிங்கலம். பாஜகவின் எந்த வலையிலும் சிக்கமாட்டார். அவரது எதிர்கால அரசியலே வேறு" என்று கெத்து காட்டுகிறார்கள்.