தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்க்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் 18 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றத் தலைவரை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏக்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நேற்று (07.05.2021) மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.வி. தங்கபாலு, ரூபி மனோகரன், விஜயதாரணி, பிரின்ஸ், செல்வபெருந்தகை, ஹசன் மவுலானா, தமிழ்மகன் ஈ.வெ.ரா உள்ளிட்ட புதிதாக தேர்வுசெய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
18 இடங்களில் வெற்றி வாய்ப்பை வழங்கிய வாக்காளர்களுக்கு நன்றி கூறியும், மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக்கும் வாழ்த்து தெரிவித்தும் கூட்டம் தொடங்கியது. அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி, “சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் அதிகாரம் தேசிய தலைவர் சோனியா காந்திக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.