Skip to main content

121 தொகுதிகளிலும் வெற்றி பெற்று வலிமையைக் காட்டுவோம்! - ராமதாஸ் 

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

dddd

 

121 தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைக்க வேண்டும்; வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இன்றே களமிறங்குங்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, ''என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

 

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. வேட்புமனுத் தாக்கல்  தொடங்க இன்னும் 10 நாட்கள் உள்ளன. மனுத்தாக்கல் முடிவடைந்து, பரிசீலிக்கப்பட்ட மனுக்களைத் திரும்பப் பெற்று, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு இன்னும் 20 நாட்கள் ஆகும். அதற்குப்  பிறகு தான் தேர்தல் பரப்புரை தீவிரமடையத் தொடங்கும். இவையெல்லாம் சாதாரணமான நாட்களில், சராசரியான அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய விஷயங்கள் ஆகும்.

 

ஆனால், நமக்கு இது சாதாரண காலமும் அல்ல... நாம் சராசரியான அரசியல் கட்சியும் அல்ல...!

 

நம்மை நம்பியவர்களுக்கும், நல்லவை செய்தவர்களுக்கும் நன்றிக்கடன் செலுத்துவதில் நம்மை விஞ்ச இந்த உலகத்தில் வேறு எவரும் இல்லை. அவ்வாறு நன்றிக்கடன் செலுத்துவதற்கான நேரமும், கடமையும் இப்போது நமக்கு வந்திருக்கிறது. அந்தக் கடமையை நிறைவேற்ற இன்றே நாம் தயாராவோம்.

 

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் போராடி வருகிறோம். பத்தாண்டுகள் தொடர் போராட்டம்,  ஒருவார கால தொடர் சாலைமறியல் போராட்டத்தில் 21 உயிர்களை இழந்த தியாகம் ஆகியவற்றுக்குப் பிறகு 1989-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர், என்னை அழைத்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பேச்சு நடத்தினார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50% இட ஒதுக்கீட்டை 6 தொகுப்புகளாகப் பிரிக்க வேண்டும்; அவற்றில் 20% கொண்ட ஒரு தொகுப்பை வன்னியர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், எனது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்த கலைஞர், வன்னியர்களுடன் 107 சாதிகளைச் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற பிரிவை உருவாக்கி அதற்கு 20% மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கி பெருந்துரோகம் செய்தார். அந்த துரோகத்தால் வன்னியர்களுக்கு கல்வி & வேலைவாய்ப்பில் 20% பிரதிநிதித்துவம் கிடைப்பதற்குப் பதிலாக, 5 விழுக்காட்டுக்கும் குறைவான பிரதிநிதித்துவமே கிடைத்தது. வன்னியர்கள் ஏமாற்றப்பட்டனர்.

 

அப்போது இழைக்கப்பட்ட துரோகத்தை தகர்த்து வன்னியர்களுக்கு உண்மையான சமூகநீதி கிடைக்க நாம் கடந்த 32 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். நமது போராட்டத்திற்கு இப்போது தான் முதற்கட்ட வெற்றி கிடைத்திருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுனரின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசாணையாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பது தான் அந்த முதற்கட்ட வெற்றி ஆகும். இது அரசு ஆவணங்களில் மட்டும் வைத்துப் பாதுகாப்பதற்கான அரசாணை அல்ல.

 

மாறாக, வன்னியர்களின் வாழ்க்கை நிலையைத் தலைகீழாக மாற்றப்போகும் அரசாணை ஆகும். கடந்த பல நூற்றாண்டுகளாகக் கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைக்காமல் சமூகத்தின் அடித்தட்டில் கிடந்த வன்னிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போகும் ஆவணம் இதுவாகும். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளாக இருந்தாலும், தமிழக அரசு மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்புகளாக இருந்தாலும் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் 3 விழுக்காட்டைக் கூட தாண்டவில்லை. அதனால் தான் எம்.பி.சி என்ற புதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவு உருவாக்கப்பட்டு, 32 ஆண்டுகள் ஆனாலும் கூட, வன்னியர்களால் வாழ்க்கைத் தரத்தில் உயர முடியவில்லை. இந்த நிலையிலிருந்து வன்னியர்களை மீட்டு, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மேம்பட்ட நிலைக்குக் கொண்டு வந்துவிட முடியாதா? என ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் தான் 10.50% இடப்பங்கீடு என்ற அருமருந்து கிடைத்திருக்கிறது.

 

இதன் மூலம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட பிரதிநிதித்துவம் கிடைக்கும். மருத்துவப் படிப்பில் 5,000 இடங்கள் இருந்தால், அதில் 525 இடங்கள் வன்னியர்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும். ஆண்டுக்கு 20 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டால், வன்னியர்கள் 2,100 பேருக்கு அரசு வேலை கண்டிப்பாக கிடைக்கும். இதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் வன்னிய மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் படிப்பார்கள்; அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் செல்வார்கள். அதன்பயனாக அவர்களின் குடும்பங்கள் முன்னேறும். படிப்படியாக வன்னியர்களின் வாழ்க்கைத் தரம் நிச்சயமாக உயரும். அவர்களும் உள்ளடக்கிய சமூகத்தின் அங்கமாக மாறுவார்கள்.

 

வன்னியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகக் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நான் போராடி வருகிறேன் என்றாலும் கூட, அந்த இட ஒதுக்கீட்டை இப்போது வழங்கியது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தான். நமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு 10.50% இடப்பங்கீட்டின் மூலம் அடித்தளம் அமைத்துள்ள அதிமுகவுக்கு நாம் என்ன நன்றிக்கடன் செலுத்தப் போகிறோம்? என்பது தான் நம் முன் உள்ள வினா ஆகும். அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவது தான் அந்தக் கட்சிக்கு பாட்டாளி சொந்தங்கள் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

 

சென்னையில் தொடங்கி வட தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகள், மேற்கு தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகள், காவிரிப் பாசன மாவட்டங்களின் பெரும்பான்மையான தொகுதிகள் எனத் தமிழ்நாட்டில் 121 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் பாட்டாளிகள் தான். எனவே, ஏற்கனவே நான் குறிப்பிட்டவாறு, ‘‘வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கினார்கள். அதனால் அவர்கள் வென்றார்கள்’’ என்று கூறும் அளவுக்கு இந்தத் தேர்தலில் பாட்டாளி சொந்தங்கள் களப்பணி ஆற்ற வேண்டும். மற்ற கட்சிகளுக்கு வேண்டுமானால் தேர்தல் பணி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு தொடங்கலாம். ஆனால், நம்மைப் பொறுத்தவரை நாம் வலிமையாக உள்ள 121 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் வென்றெடுத்துத் தர வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது. அதனால் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை நாம் இன்றே தொடங்க வேண்டும்.

 

வீடு வீடாக, கிராமம் கிராமமாக, ஒன்றியம் ஒன்றியமாக, தொகுதி தொகுதியாகச் சென்று 10.50% இட ஒதுக்கீடு வழங்கிய அதிமுக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இன்று முதலே பாட்டாளி மக்கள் கட்சியினர் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். கடுமையான நெருக்கடிகளுக்கு இடையிலும் அதிமுக இட ஒதுக்கீடு அளித்தது குறித்தும், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து 10.50% இடப் பங்கீட்டை ஒழித்துக் கட்ட திமுகவும், அதன் தலைமை குடும்பத்தினரும் சதி செய்வது குறித்தும் மக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அமைதியான முறையில் இரு சக்கர ஊர்தி பேரணி நடத்தி, அதன் மூலமாகவும் பரப்புரை செய்யலாம்.

 

cnc

 

சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்களையும் பாட்டாளிகள் சந்திக்க வேண்டும். அனைத்துச் சமூகங்களுக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பது தான் பாமகவின் கொள்கை என்றும், அதன்படி, சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மற்ற சமுதாயங்களின் இட ஒதுக்கீட்டுக்காகவும் மருத்துவர் அய்யா அவர்கள் போராடவிருக்கிறார் என்ற தகவலையும் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

 

கும்மிடிப்பூண்டி தொடங்கி, கன்னியாகுமரி வரை அனைத்து 234 தொகுதிகளிலும் அதிமுக அணியே  வெற்றி பெற வேண்டும். அந்த தொகுதிகளில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் தங்களின் பங்களிப்பைச் செலுத்த வேண்டும். நமது கோட்டையாகத் திகழும் 121 தொகுதிகளில் நமது முயற்சியால், உழைப்பால், பங்களிப்பால் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும். இந்த 121 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் எந்தக் கட்சி வேண்டுமானாலும் போட்டி இடலாம்; யார் வேண்டுமானாலும் வேட்பாளராக களமிறக்கப் படலாம்; அவர் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் பணிகளைத் தொடங்கலாம். அதைப்பற்றியெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சியினர் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் இன்று முதலே களத்தில் இறங்கி அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்; வெற்றியை உறுதிசெய்ய வேண்டும். இன்றே களமிறங்குங்கள்!'' எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.