தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், 75 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற மே 2-ம் தேதி இந்த மையங்களில் தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான வி.செந்தில்பாலாஜி மாவட்ட தேர்தல் அதிகாரியான, மாவட்ட ஆட்சியருக்கும், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி, கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், அரவக்குறிச்சி மற்றும் கிருஷ்ணராயபுரம், குளித்தலை சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோருக்குப் புகார் அளித்திருந்தார்.
அதில், நான் 135 கரூர் சட்டமன்றத் தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரும் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமாவேன். கடந்த 06.04.2021 தேதி அன்று நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று மேற்படி தேர்தலில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை தொகுதிகளில் பதிவான வாக்குப்பெட்டி இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்காக கரூர் மாவட்டம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமரா மூலமாக நேரடியாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேற்படி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிட அறையின் பின்புறம் உள்ள பகுதிகளைக் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் பின்புறம் வழியாக வெளியாட்கள் சென்று அங்குள்ள வாக்கு இயந்திரங்களை சேதப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள ஒருசில கேமராக்கள் சரியாக இயங்கவில்லை. மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்களை மேலும் அதிகரித்து மூன்று கட்டமாக சுழற்சி முறையில் பணியமர்த்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகியவற்றின் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட அறை ஒன்றில் கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பயன்பாட்டில் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. உடனடியாக வாக்கு எண்ணும் மையத்தை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரசாந்த் மு வடநேரே உள்ளிட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் இளங்கோ உள்ளிட்டோர் குற்றச்சாட்டு எழுந்த வாக்கு எண்ணும் மையத்தின் அருகாமை அறையில் உள்ள கணினி உள்ளிட்ட மின் சாதனங்களையும், சிசிடிவி அறையினையும் தொழில்நுட்பப் பணியாளர்கள் உதவியுடன் நேரில் பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாக்கு எண்ணும் மையத்தில் பின்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்திருந்தேன். பின்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தின் அருகாமையில் அமைந்துள்ள கல்லூரி நிர்வாகத்தின் கணினிப் பயிற்சி அறையில் ஆள் இல்லாத நேரத்திலும், விடுமுறை நாளிலும் கணினி உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்பாட்டில் இருந்ததாக திமுகவை சேர்ந்த முகவர்கள் எழுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.
அந்த கணினி அறை மற்றும் சிசிடிவி கண்காணிப்பு அறைகளை தொழில்நுட்பப் பணியாளர்கள் உதவியுடன் நேரில் பார்வையிட்டோம். கல்லூரியைச் சேர்ந்த பணியாளர்கள் அந்த அறைகளில் மின்சாதனங்களின் பிரதான இணைப்பை அணைத்துவிட்டுச் சென்றதாகவும், ஆனால் சில சாதனங்கள் பயன்பாட்டில் இருந்தது தெரியாது என்றும் கூறினர்.
மாவட்டத்தில், நான்கு தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை மையத்தின் அருகில் உள்ள கட்டடத்தில் கம்ப்யூட்டர்கள் செயல்பாட்டில் இருந்துள்ளன. அதுகுறித்து, நாங்கள் விளக்கம் கேட்டபோது, தேர்தல் பிரிவு அதிகாரிகள், கல்லூரி நிர்வாகம் கூறிய பதில் திருப்தி அளிக்கவில்லை.
கரூர் தொகுதியில், 77 பேர் போட்டியிடுகின்றனர். 355 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதனால், ஒரு ரவுண்ட் ஓட்டுகளை எண்ணி முடிக்க, 45 நிமிடம் தேவைப்படும். இதனால் மே, 3 அதிகாலை வரை ஓட்டு எண்ணிக்கை தொடர வாய்ப்புள்ளது. ஓட்டு எண்ணிக்கையை விரைவுப்படுத்தும் வகையில் எண்ணிக்கை ரவுண்டை, 28 ஆக உயர்த்த வேண்டும். இதுகுறித்து, கலெக்டருக்கு கடிதம் கொடுத்துள்ளோம். ஓட்டு எண்ணிக்கை மையங்களில், எலக்ட்ரானிக் பொருட்கள், கணினிப் பொருட்களைக் கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.