2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (06.04.2021) நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல துவங்கியுள்ளனர். இவர்களுக்கான தபால் வாக்குகள் பலருக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தல் பணிக்கான பயிற்சி வகுப்பின்போதே சிலருக்கு தபால் வாக்குகள் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும், பலருக்கு கொடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட தங்களது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் அதிமுக அரசிடம் கடைசிக் கட்டம் வரை போராடினார்கள். இருப்பினும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தநிலையில் தபால் வாக்குகள் இன்னும் பலருக்கு வரவில்லை என்றதும், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், ஏன் தபால் வாக்குகள் இன்னும் வரவில்லை என்ற சந்தேகத்தை எழுப்புகின்றனர்.
இதில் தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு, இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து, தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் தபால் வாக்குகள் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.