சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது தோழி சசிகலா இன்று (16.10.2021) மரியாதை செலுத்தினார்.
சென்னை தி.நகரில் உள்ள இல்லத்திலிருந்து இன்று காலை 10.30 மணிக்குப் புறப்பட்ட நிலையில், அவருக்குத் தொண்டர்கள் வரவேற்பளித்தனர். மெரினாவில் உள்ள ஜெ. நினைவிடம் சென்ற சசிகலா அங்கு அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியபோது அவரது கண்கள் கலங்கின.
ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கு முன்பு ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை செய்ததோடு, நினைவிடத்தில் மூன்றுமுறை அடித்து சத்தியமும் செய்திருந்தார். அரசியலைவிட்டு விலகப்போவதாக அறிவித்திருந்த சசிகலா, அண்மைக்காலமாக அதிமுகவை மீட்கப்போவதாக அவரது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஃபோனில் பேசும் ஆடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சசிகலா மூன்று வருடங்களுக்குப் பிறகு ஜெ. நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ள நிலையில், யானை பலம்கொண்ட அதிமுகவை கொசு தாங்கியிருப்பதாகக் கூறுவது நகைச்சுவையாக இருப்பதாகவும், சசிகலா நடிப்புக்கு ஆஸ்கர் தரலாம் எனவும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதேபோல் அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை. அமமுகவில் அவருக்கு இடம் கொடுத்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார் ஜெயக்குமார்.