
மதுரை மாவட்டம், அண்ணாநகர் பகுதியில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் அலுவலகத்தில் இன்று (26/06/2022) காலை செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், "அ.தி.மு.க. தொண்டர்களை குழப்பும் வகையிலும், மீண்டும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் ஓ.பன்னீர்செல்வம் செயல்படக்கூடாது. கட்சி சீர்திருத்தத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் உடன்பட்டால் அவர் கட்சி தொண்டர்களின் மனதில் நிறைந்திருப்பார். அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது.
ஜனநாயக முறைக்கு எதிராக எந்தவொரு கருத்தும் பொதுக்குழுவில் கூறப்படவில்லை. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறக் கூடாது என்று எந்த தலைவராவது நீதிமன்றத்திற்கு செல்வார்களா? மன உறுதியோடு இருக்கக் கூடிய தலைவரைதான் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒற்றைத் தலைமை வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள். இரட்டை தலைமையால் பல பிரச்சனைகளில் பின்னடைவு ஏற்பட்டதால் தான் ஒற்றைத் தலைமையை வலியுறுத்துகிறோம். ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தின் நலன் மீது மட்டுமே அக்கறைக் காட்டினார்.
டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் ரகசியமாக உரையாடுகிறார்; இல்லத்தில் சந்தித்துப் பேசுகிறார்கள். தி.மு.க.வை எதிர்த்துப் போராடுவதே அ.தி.மு.க.வின் குறிக்கோள். அ.தி.மு.க.வில் உறுதியான நிலைப்பாடு இருக்க வேண்டும். முடிவுகளை மாறி மாறி எடுத்து சந்தேகத்திற்குரிய ஒரு தலைமை இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. சந்தேக தலைமை வேண்டாம்; நம்பிக்கைக்குரிய தலைமையே வேண்டும்" எனத் தெரிவித்தார்.