தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாகக் கடந்த வாரம் நடைபெற்றது. ஒரு லட்சம் பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் 75 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (12.10.2021) காலைமுதல் எண்ணப்பட்டுவருகிறது.
இன்று பிற்பகல் 2.41 மணி நிலவரப்படி, 140 மாவட்ட கவுன்சிலர்களில் திமுக 138 இடங்களிலும், அதிமுக இரு இடங்களிலும் முன்னணியில் உள்ளது. 1,381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 1,009 இடங்களிலும், அதிமுக 215 இடங்களிலும் முன்னணியில் இருந்துவருகிறது. பாமக 47 இடங்களிலும், அமமுக 5 இடங்களிலும், தேமுதிக ஒரு இடத்திலும், பிற கட்சிகள் 95 இடங்களிலும் முன்னணியில் இருந்துவருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட, ஒன்றிய தலைவர் பதவிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் 110 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.
இந்நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற வெற்றி புறவாசல் வழியாக பெற்ற வெற்றி. திமுகவின் புறவாசல் வெற்றியை சட்டத்தின் முன்னும், ஜனநாயகத்தின் முன்னும் வெளிப்படுத்துவோம். பல இடங்களில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர்களை தோல்வியடைந்ததாக அறிவித்துள்ளார்கள். அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை அறிவிக்கத் தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டவில்லை. பல இடங்களில் வாக்கு எண்ணிக்கையை உள்நோக்கத்தோடு தாமதப்படுத்தினர்'' எனத் தெரிவித்துள்ளனர்.