ரத்தம் சிந்தி சாதிக்க வேண்டிய புரட்சியை, சத்தம் இல்லாமல் சாதித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் எனத் திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், நக்கீரன் யூ-ட்யூப் தளத்தில் நாஞ்சில் சம்பத்தின் நேர்காணல் வெளியானது. அதில் அவர், "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டத்தைச் சிலர் எதிர்க்கிறார்கள். அது அவர்களின் உரிமை. அதை நான் மறுக்கவில்லை. ஆனால், குறிப்பிட்ட சமூகம் மட்டும்தான் அர்ச்சகர் ஆக இருக்கவேண்டும் என எந்த ஆகம விதியும் கூறவில்லை. இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதால், உலகத் தமிழர்களிடம் 'சபாஷ்' பெற்றுவிட்டார் முதல்வர் ஸ்டாலின். திமுக அந்தக் காலத்தில் இருந்து அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்து வருகிறது. ஆனால், உச்சநீதிமன்றம் வரை சென்று அதைச் சிலர் தடுத்து நிறுத்தினர். இப்போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதை நிறைவேற்றி 58 அர்ச்சகர்களுக்கு நியமனம் வழங்கியுள்ளது திமுக அரசு. குறிப்பாக இதில், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஒரு பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டுள்ளார். இது தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள மிகப் பெரிய புரட்சி. ரத்தம் சிந்தி சாதிக்க வேண்டிய புரட்சியை, சத்தமில்லாமல் சாதித்திருக்கிறார் ஸ்டாலின்.
பெரியாரின் நெஞ்சில் ஒரு முள் தைத்திருந்தது. அந்த முள்ளோடு தான் நாம் அவரை இந்த மண்ணில் அடக்கம் செய்தோம். அந்த முள்ளை இன்று நமது முதல்வர் ஸ்டாலின் அகற்றியிருக்கிறார். பெரியாரின் கனவு நனவாகிக்கொண்டு வருகிறது. 'திராவிட மாடல்' ஆட்சி இன்றைக்குத் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது" இவ்வாறு கூறினார்.