டைம்ஸ் பத்திரிகையின் 2020-ஆம் ஆண்டுக்கான உலகின் மிக செல்வாக்கான மனிதர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மோடியும், நடிகர் ஆயுஷ்மான் குரோனாவும் இடம்பெற்றுள்ளனர். மோடியைப் பற்றிய டைம்ஸ் ஆசிரியர் கார்ல் விக்கின் குறிப்பு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
“சுதந்திரமான தேர்தல்கள் மட்டுமே ஜனநாயகத்தின் முக்கிய அம்சமல்ல. தேர்தல்கள் யார் அதிக வாக்குகள் பெற்றார்கள் என்பதை மட்டுமே காட்டுகிறது. அதைவிட தேர்தலில் வென்றவருக்கு வாக்களிக்காதவர்களின் உரிமையும் மிக முக்கியமானது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா திகழந்துவருகிறது. 130 கோடிக்கும் அதிகமான அதன் மக்கள் தொகையில் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள் மற்றும் இதர சமய பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
அனைவரும் இந்தியாவில் ஒருங்கிணைந்து வாழ்கின்றனர். இதனைத்தான் இந்தியாவில் அடைக்கலம்கோரி தன் வாழ்வில் பெரும்பகுதியைக் கழித்த தலாய் லாமா இணக்கம் மற்றும் நிலையான தன்மைக்கு உதாரணமாகப் புகழ்ந்துபேசுவார்.
நரேந்திர மோடி இவையனைத்தையும் சந்தேகத்துக்கு இடமாக்கிவிட்டார். இந்தியாவின் அனைத்து பிரதமர்களும் இந்து மதத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தபோதும், மோடி மட்டுமே மற்ற மதத்தவர்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. முதல்முறை அனைவருக்கும் கூடுதல் அதிகாரம் அளிப்பதாக வாக்களித்து பிரதமரானார் மோடி. அவரது இந்து தேசிய பாரதிய ஜனதா கட்சி பன்மைத்தன்மையை நிராகரித்துவிட்டது. முக்கியமாக இந்தியாவின் முஸ்லிம் மக்களைக் குறிவைத்து செயல்படுகிறது. கொடூரமான கரோனா தொற்றுநோய்ச் சூழலிலும் எதிர்ப்பை கட்டுப்படுத்தும் போர்வையில் முஸ்லிம்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்.. உலகின் மிகத் துடிப்புமிக்க ஜனநாயகம் மீது இருள்படியத் தொடங்கியுள்ளது” என டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியரான கார்ல் விக் விமர்சித்துள்ளார்.
மோடி ஆதரவாளர்களோ… டைம்ஸ் பத்திரிகையினர் விஷம் கக்கியுள்ளனர். டைம்ஸ் பத்திரிகை எப்போதுமே இந்தியாவுக்கு எதிரான மனநிலை உடையது என கொதிக்கின்றனர்.
அவர்களின் கொதிப்புக்கு இந்த விமர்சனம் மட்டுமல்ல, வேறொரு காரணமும் இருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தில் டிசம்பர் மாத குளிரையும் பொருட்படுத்தாமல் ஒருநாள்கூட விடாமல் கலந்துகொண்டவர்கள் அஸ்மா காட்டுன் (90), சரஸ்வதி(75), பில்கிஸ். இவர்களில் பில்கிஸ் டைம்ஸ் பத்திரிகையின் 2020-ன் மிகச் செல்வாக்கான 100 பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
சட்டத்துக்கு விரோதமாக டெல்லி ஷாகின்பாக்கில் தர்ணா மேற்கொண்டவர்களையும், பில்கிஸ் தாதி என்னும் மூதாட்டியையும் டைம்ஸ் பிரதானப்படுத்தியுள்ளது எனக் கரித்துக்கொட்டுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, “டைம்ஸ் பட்டியலில் என் பெயர் வந்ததைவிட, எங்கள் கோரிக்கை அரசால் செவிமெடுக்கப்பட்டிருந்தால் மகிழ்ந்திருப்பேன்” என்கிறார் பில்கிஸ்.