தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள அரசின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் வெளியேறிச் சென்ற பிறகு அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியாகப் பேசியிருக்கிறார். அதில், ''அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள். தங்கள் துறைகளில் நியமனங்கள், தனி உதவியாளர் நியமனங்களில் கூட வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். எந்த ஒரு முறைகேட்டிற்கும் ஆளாகாதீர்கள். நேர்மையான முறையில் இந்த நியமனங்கள் இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் தற்பொழுது ஆட்சிக்கு வந்திருக்கிறோம். எனவே, மக்களிடம் நல்ல நிர்வாகத்தைக் கொண்டு செல்ல வேண்டும். பல்வேறு பிரச்சனைகளுக்காக அல்லது உங்களது தொகுதி பிரச்சனைகளுக்காக நீங்களே நேரடியாகக் காவல் அதிகாரிகளை அழைத்துப் பேசாதீர்கள். காவல்துறை முதல்வர் வசம்தான் இருக்கிறது. எனவே, நேரடியாக என்னிடமே அந்தப் புகாரை நீங்கள் தெரிவிக்கலாம்'' எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.