தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தூத்துக்குடி சம்பவம் குறித்து நடந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. ஆளும் கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
144 தடை உத்தரவு எதனால் போடப்பட்டது? பேரணியில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக முதல்வர் கூறியுள்ளார். போலீஸ் உளவுத்துறை என்ன செய்தது? தூத்துக்குடி சம்பவ நடந்து ஐந்து நாட்களாக உங்கள் எம்.எல்.ஏ.க்களை தூத்துக்குடியில் பார்க்க முடியவில்லையே? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். இதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து தினகரனுக்கு எதிராக குரல் எழுப்பினர்.
தினகரனுக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கும் வாக்குவாதம் நீடித்த நிலையில், சபாநாயகர் தலையிட்டு இரு தரப்பையும் அமைதிப்படுத்தியதும், மின்துறை அமைச்சர் தங்கமணி எழுந்து விளக்கம் சொல்ல முற்பட்டார்.
அப்போது மீண்டும் எழுந்து பேச முயன்ற தினகரனை பார்த்து “நீ யார் கேட்பதற்கு?” என்றார் அமைச்சர் தங்கமணி.
உடனே, தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் ஆவேசமாக எழுந்து, “எப்படி ஒரு உறுப்பினரை நீங்கள் ஒருமையில் பேசலாம்?”என்றார். அவரைத்தொடர்ந்து பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் தினகரனை ஒருமையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதும்தான், “நான் தெரியாமல் ஒருமையில் பேசி இருந்தால் அதை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்” என்றார் அமைச்சர் தங்கமணி.