ஆவின் பால் பாக்கெட்டுகளில் அளவு குறைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டிய நிலையில், பொய் கூறுவதையே அண்ணாமலை தொழிலாக வைத்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆவடி பேருந்து பணிமனையிலிருந்து ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல் வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு புதிய வழித்தடத்தில் 2 மிதவைப்பேருந்து சேவையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “தவறான கருத்துகளை கூறி தன்னை முன்னிலைபடுத்திகொள்ள வேண்டுமென ஒரு சில ஜீரோ தலைவர்கள் அரசியல் தலைவர்கள் என்ற போர்வையில் தங்களுடைய கருத்துகளை கூறிவருகின்றனர்.
ஆவின் பால் பாக்கெட்டுகள் 3 விதமான ஆய்வுகளுக்கு பிறகே நாள் ஒன்றுக்கு 65 லட்சம் பாக்கெட்கள் பேக்கிங் செய்து அனுப்பப்படுகிறது. ஆவினில் தயாரிக்காத சத்து மாவில் ஊழல் நடந்ததாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளையெல்லாம் முன்வைத்தனர். அண்ணாமலை நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக பொய் கூறுவதையே தொழிலாக வைத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.