மருத்துவக் கல்வி விஷயத்தில் தொடர்ந்து சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு, இப்போது ஓசையில்லாமல் இன்னொரு துரோகத்தை செய்திருக்கிறது. நடப்பாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இது மிகக் கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்றத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டத்தின்படி அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி, மாநில அரசுகளுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் இந்த ஒதுக்கீடு பொருந்தும். ஆனால், நடப்பாண்டில் அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு எந்த அறிவிப்பும் இல்லாமல் நீக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் 50% அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 8000க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றை நிரப்பும் போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% என மொத்தம் 49.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசு, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இட ஒதுக்கீட்டை மறுத்துள்ளது. இதனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த 2160 மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய முதுநிலை மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சதி; சமூக அநீதியாகும்.
மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் 27% ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் போது அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பில் மட்டும் 27% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்ன?
மத்திய அரசின் இந்த சமூக அநீதிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடிப்பதற்கு முன்பாக நடந்த தவறு சரி செய்யப்பட வேண்டும். அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உடனடியாக 27% இட ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும். ஒரு வேளை ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர்கள் இதனால் வெளியேறும் நிலை ஏற்பட்டால் நடப்பாண்டுக்கு மட்டும் கூடுதல் இடங்களை உருவாக்கி அவற்றில் அவர்களை சேர்க்க வேண்டும். அதேபோல், முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடங்களை ஒதுக்கும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையில் இந்திய மருத்துவக் கழகத்தின் விதிகளில் தேவையான திருத்தங்களை செய்யும்படி மத்திய அரசுக்கு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.