Skip to main content

பொடா – தடா – மிசாவை பார்த்தவர்கள் நாங்கள்... மு.க.ஸ்டாலின் பேட்டி 

Published on 24/10/2018 | Edited on 24/10/2018
M. K. Stalin


தமிழக அரசு சார்பில் தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் தொடர்பாக இன்று (24-10-2018) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஜரானார். 
 

பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர்,  
 

அ.தி.மு.க ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதும், அவருடைய மறைவுக்குப் பிறகு இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியின் சார்பிலும் என் மீது ஏறக்குறைய ஏழு அவதூறு வழக்குகள் போடப்பட்டிருக்கிறது.
 

அதை நான் வரிசைப்படுத்தி சொல்ல வேண்டுமென்று சொன்னால், ஜெயலலிதா இந்த முறை ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வழக்காக என் மீது ஒரு வழக்கைப் போட்டார்கள். என் மீதும், என்னுடைய குடும்பத்தினர் மீதும் ஒரு தவறான அடிப்படையில் ஒரு குற்றச்சாட்டை சுமத்தினார்கள். ஆகவே, அது நியாயமான குற்றச்சாட்டு அல்ல, பொய்க் குற்றச்சாட்டு என்பதை உணர்ந்து நானே நேரடியாக டி.ஜி.பி அலுவலகத்திற்கு சென்று என் மீது போடப்பட்டிருக்கக்கூடிய வழக்கு ஒரு பொய் வழக்கு என்றேன். என் மீது ஒரு FIR-யை இந்த ஆட்சி பதிவு செய்திருக்கிறது.  FIR என்று சொன்னால் First Information Report என்று அதற்குப் பொருள். ஆனால், என் மீது போடப்பட்டிருக்கக்கூடிய FIR -யை பார்க்கிறபோது Fraud Information Report என்று அன்றைக்கே நான் குறிப்பிட்டுச் சொன்னேன். அதற்காக ஒரு மான நஷ்ட வழக்கு என் மீது போடப்பட்டிருக்கிறது.
 

இரண்டாவதாக செம்பரம்பாக்கம் ஏரியை திறந்த காரணத்தால் சென்னை மாநகரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் இறந்து போயிருக்கிறார்கள். அந்த வெள்ளத்தில் சிக்கி பல வீடுகள் பறிபோயிருக்கிறது. ஆகவே, இதற்கெல்லாம் காரணம் இப்போது நடக்கக்கூடிய இந்த அ.தி.மு.க ஆட்சிதான் என்று தெளிவாக எடுத்துச் சொன்னேன். மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தும் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்த பேராபத்து ஏற்பட்டிருக்கிறது என்று நான் தெளிவாக எடுத்துச் சொன்னேன். அதற்கு என் மீது வழக்கு போடப்பட்டது.
 

இதில் வேடிக்கை என்னவென்று சொன்னால், அந்த வழக்கு சம்பந்தமாக சாட்சியத்தை விசாரிக்கிறபோது அரசு தரப்பில் ஆஜரான சாட்சியர் திரு பரணிகுமார் என்பவர் அந்த சாட்சியத்தை சொல்லுகிறபோது தெளிவாக சொல்லியிருக்கிறார். ‘எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை, மத்திய அரசு எச்சரிக்கை தாக்கீது அனுப்பி இருப்பதைத் தான் தெளிவாக எடுத்து சொல்லியிருக்கிறார். வருவாய்த் துறை அமைச்சராக இருக்கக்கூடிய உதயகுமார் அதை முறையாக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களிடத்திலே சொல்லவில்லை. அதனால்தான் இந்த ஆபத்து ஏற்பட்டிருக்கிறது’ என்று மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அந்த அடிப்படையில் என்மீது ஒரு மான நஷ்ட வழக்கு போடப்பட்டிருக்கிறது.
 

அடுத்து சென்னையிலே காலரா நோய் பரவிய நேரத்தில், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் ‘vacation tour போயிருக்கிறார்’ என்று நான் பேசிய பேச்சுக்கு ஒரு மான நஷ்ட வழக்கு.
 

நான்காவதாக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சென்னை கோட்டையில் இருப்பதை விட கொடநாட்டிலே தான் அதிகம் தங்கி கொண்டு இருக்கிறார், என்று நான் பேசிய பேச்சுக்காக அதற்கு ஒரு மான நஷ்ட வழக்கு.
 

ஐந்தாவதாக, சட்டமன்றத்தில் மேட்டூர் அணையினுடைய நிலவரத்தைப் பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது அப்பொழுது அந்த துறை அமைச்சரும், இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமிதான் பொதுப்பணித்துறை அமைச்சர். அவர் அதற்கு விளக்கம் சொல்லுகிற போது, ‘மில்லியன் கன அடி’ என்று சொல்ல வேண்டும். அதற்குப் பதில் தவறுதலாக ‘கன அடி’ என்று சொல்லிவிட்டார், இதைப்பற்றி நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்கான வாய்ப்பை மறுத்தார்கள். அதனால், வெளியிலே வந்து உங்களைப் போன்ற ஊடகத் தோழர்களிடத்திலே நிருபர்களிடத்திலே இதுபற்றி நான் எடுத்துச் சொன்னேன். அதற்காக ஒரு மான நஷ்ட வழக்கு.
 

அடுத்து, ஆறாவதாக திருச்சியில் ஒரு பொதுக்கூட்டத்திலே பேசுகிற போது, பல்கலைக் கழகத்தினுடைய விவகாரங்களை எல்லாம் இன்றைக்கு பார்த்துக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசிடம் மாநில அரசு அந்தப் பல்கலைக்கழக விவகாரங்களைக் கூட அடமானம் வைக்கக்கூடிய சூழ்நிலையில் ஒரு எடுபிடியாக இந்த எடப்பாடி தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று நான் சொன்னேன். அதற்கு ஒரு மான நஷ்ட வழக்கு.
 

இதுபோன்று ஏழு மான நஷ்ட வழக்குகள் என் மீது போடப்பட்டிருக்கிறது. இதை நான் எந்த நேரத்திலும் சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறேன்.
 

இதில் வேடிக்கை என்னவென்று சொன்னால், மானம் போயிருக்கக்கூடிய அரசு இந்த எடப்பாடி பழனிசாமி அரசு. ஏனென்றால், எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது அது அவருடைய மானம். அடுத்து குட்கா புகழ் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் பல அமைச்சர்கள் மீதும் பல அதிகாரிகள் மீதும், இன்றைக்கு பல வழக்குகள் புனையப்பட்டு சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற சூழ்நிலையிலே தான், அவர்கள் மானம் ஒரு பக்கத்தில் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், இன்றைக்கு எங்கள் மீது போடப்பட்டிருக்கக்கூடிய இந்த மான நஷ்ட வழக்கை எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தடாவை பார்த்தவர்கள், பொடாவை பார்த்தவர்கள், மிசாவை பார்த்தவர்கள், அவர்களுடைய அம்மா ஜெயலலிதா போட்ட வழக்குகளை எல்லாம் சந்தித்தவர்கள் நாங்கள். எனவே, இதுபோன்ற மான நஷ்ட வழக்குகளை எல்லாம் சந்திப்பதற்கு நான் மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய முன்னணித் தலைவர்களாக இருந்தாலும், செயல் வீரர்களாக இருந்தாலும், இந்த இயக்கத்தினுடைய தொண்டர்களாக இருந்தாலும் அதை எந்தச் சூழ்நிலையிலும் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம். இவ்வாறு கூறினார்.
 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அரசின் பதிலால் மதுரை மக்கள் அதிர்ச்சி... மு.க.ஸ்டாலின்

Published on 17/12/2020 | Edited on 17/12/2020
M. K. Stalin


 
திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள பதில், மதுரை மண்டலத்தில் வாழும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

 

மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், ''மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிலத்தை அ.தி.மு.க. அரசு இதுவரை மத்திய அரசுக்கு வழங்காமல் தாமதம் செய்து கொண்டிருக்கிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள பதில், மதுரை மண்டலத்தில் வாழும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது.


2015-ல் அறிவிக்கப்பட்டு - நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு - வாக்காளர்களை ஏமாற்றும் நோக்கில், நாடாளுமன்றத் தேர்தலுக்காக அவசரம் அவசரமாக, 2019 ஜனவரி மாதத்தில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்ற இந்த விழா நடைபெற்று இரண்டு ஆண்டுகளாகப் போகிறது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை இன்னமும் ஒப்படைக்கவில்லை.


ஜிக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு அதுவும் கையெழுத்து ஆகவில்லை!


ஜூன் 2019-ஆம் ஆண்டே பி.எம்.எஸ்.எஸ்.ஒய். திட்டத்தின் இயக்குநர், "மாநில அரசிடம் நிலம் பெறுவது ஒரு பிரச்சினையே அல்ல; மாநில அரசிடம் நிலம் இருக்கிறது. நான் அங்குச் சென்று கையெழுத்திட வேண்டும். அவ்வளவுதான்" என்று பேட்டியளித்து பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. இந்தக் கையெழுத்துப் போடுவதற்கு 18 மாதங்களா? இதிலும் யாரிடமாவது பேரம் பேசலாம் என்ற எண்ணமா?


மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் அ.தி.மு.க. அரசு ஆகியவற்றின் அலட்சியத்தால் ஐந்து ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டம் ஆழ்ந்த உறக்கம்  கொண்டிருக்கிறது. அறிவிப்பிற்கும் - செயல்பாட்டிற்கும் இடையில் 5 ஆண்டுகள் இடைவெளி என்பது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத் திறமைக்கான இலக்கணமா? 


சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் மீண்டும் ஒரு கபட நாடகம் போட எத்தனிக்காமல் - மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' என கூறியுள்ளார். 

 

Next Story

ஸ்டாலினை ஏமாற்றும் தி.மு.க. நிர்வாகிகள்!

Published on 07/12/2020 | Edited on 07/12/2020
M. K. Stalin

 

 

ஆட்சி மாற்றத்திற்கான காரணங்களை காணொளி கூட்டங்கள் வாயிலாக வரிசையாக அடுக்கி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொண்டர்களை ஊக்கப்படுத்தி வருகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். ஜனவரியிலிருந்து அவர் நேரடியாகப் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் கனிமொழி, உதயநிதி, பொன்முடி, லியோனி என கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் பரப்புரை பயணத்தை இப்போதே தொடங்கி விட்டனர். எடப்பாடி பழனிசாமி ஏரியாவிலிருந்து பரப்புரையைத் தொடங்கிய கனிமொழிக்கு நல்ல வரவேற்பு.

 

"மக்களிடமும் மாற்றத்திற்கான மனநிலை உள்ளது. அடிமட்டத் தொண்டர்களிடமும் வேகம் தெரிகிறது. ஆனால், நீண்டகால நிர்வாகிகளின் உள்குத்து தி.மு.க.வின் தீராத வியாதியாகப் பல மாவட்டங்களில் தொடர்கிறது. மலை மாவட்டமான நீலகிரியில் இது சிகரமாக உயர்ந்து நிற்கிறது'' என வேதனையோடு சொன்னார்கள் உடன்பிறப்புகள்.

 

காணொளி வழியே நடந்த நீலகிரி மாவட்ட முப்பெரும் விழா கூட்டத்தில், "நாம் ஆட்சிக்கு வந்ததும் கொடநாடு குற்றவாளிகளை கண்டுபிடிப்போம்'' என மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார். கொடநாடு மர்மக் கொலைகளின் சூத்ரதாரியான சஜீவனுக்கு அ.தி.மு.க.வின் வர்த்தக அணிப் பொறுப்பை எடப்பாடி வழங்கியதை சுட்டிக்காட்டி ஸ்டாலின் இப்படிச் சொன்ன நிலையில்... நீலகிரி தி.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க. சஜீவனுடன் அரசியல் -வர்த்தக உறவு வைத்திருப்பது மெல்ல மெல்ல அம்பலமாகி வருகிறது.

 

ddd

 

"எங்க மாவட்டச் செயலாளர் முபாரக்குக்கும், எக்ஸ் மினிஸ்டர் இளித்துறை ராமச்சந்திரனுக்கும் ஏழாம் பொருத்தம்ங்கறது எல்லாருக்குமே தெரிஞ்சதுதான். ஆனா இப்போ முபாரக் இளித்துறைகூட பின்னிப் பிணையிறாரு. பல கோடிகள் செலவழிச்சு இந்த ஊட்டியில கட்சி ஆபீஸ் கட்டியிருக்கிறோம். ஆனா இந்த ஆபீஸ் படிகள் ஏறக் கூட முபாரக்குனால முடியறதில்லை. கட்சி கூட்டம் ஏதாவது நடத்துணும்னா ஹில் பார்க்ல இருக் கற ஆ.ராசா எம்.பி.யின் படிகளே இல்லாத அலுவலகத்தைதான் பயன்படுத்துறாரு முபாரக். அதனால தி.மு.க. கட்சி ஆபீசு சும்மா இருக்குதுன்னு நினைக்காதீங்க. ஊட்டி தி.மு.க. முன்னாள் ந.செ.வும், தலைமை செயற்குழு உறுப்பினருமான ரவிக்குமார், கட்சி ஆபீஸை கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி நடத்தும் இட மாக மாற்றிக்கொண்டுவிட்டார். ஊட்டி மார்க்கெட்ல. கடை வச்சிருக்குற அத்தனை அ.தி.மு.க.காரங்களும் தி.மு.க. ஆபீசுல கூடித் தான் பஞ்சாயத்து பண்ணுறாங்க'' என்கிறார்கள் சொந்தக் கட்சிக்காரர்களே. ""கட்சி ஆபீசுக்கு லிஃப்ட் போடணும்னு சொல்லி மார்வாடிகளிலிருந்து மளிகைக் கடைவரை வசூல் நடத்தப்பட்டதால்... தி.மு.க. கொடி போட்ட கார்களைப் பார்த்தாலே ஊட்டி வியாபாரிகள் தெறித்து ஓடும் நிலை உருவாகி யுள்ளது'' என்றும் கூறுகிறார்கள்.

 

இது குறித்து அறிவாலயத்திற்குப் புகார்கள் பறந்த நிலையில், மாவட்ட அரசியலில் எலியும் பூனையு மாக இருந்த முபாரக்கும் முன்னாள் அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரனும் திடீர் நட்பு கொண்டிருப்பது அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. இதன் சூட்சுமம் குறித்தும் கட்சிக்காரர்கள் விளக்குகிறார்கள்.

 

"குன்னூரில் முபாரக்கும், ஊட்டியில் ராமச்சந்திர னும் போட்டியிடலாம் என முபாரக் தெரிவித்துள்ளார். ராமச்சந்திரனின் இளித்துறை கிராமம் குன்னூர் தொகுதியில் உள்ள நிலையில், அவரை ஊட்டிக்கு அனுப்ப முபாரக் நினைப்பதிலும் அரசியல் உள்ளது. ஊட்டியில் உள்ள வடக்கு ஒன்றியத்தின் செயலாளர் துரை, தெற்கு ஒன்றியத்தின் பரமசிவம், மேலூர் ஒன்றியத்தின் உதயதேவன் மூவருமே முபாரக் ஆதரவாளர் கள். ந.செ. ஜார்ஜ் மட்டுமே ராமச்சந்திரனுக்கு நெருக்கம். அதனால், சீட் கிடைத்தாலும் ஊட்டியில் ராமச்சந்திரன் வெற்றிக்குப் போராடவேண்டும். இது அ.தி.மு.க. வர்த்தக அணி பொறுப்புடன், நீலகிரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளராகவும் எடப்பாடியால் தட்டிக் கொடுத்து வளர்க்கப்படும் சஜீவனுக்கே சாதகமாகும்'' என்கிறார்கள்

 

ddd

 

தி.மு.க.வின் தலைமைக் கழகப் பேச்சாளரான ஆளன் நம்மிடம், "நான் 1986-ல இருந்து தி.மு.க.வுல இருக்கறேன். உங்களுக்கு வந்த தகவல்களில் உண்மை இருக்கு. அ.தி.மு.க.வின் தேர்தல் பொறுப்பாளராக சஜீவன் நியமனம் செய்யப்பட்ட பிறகு, தன் கட்சியினரை சந்திப்பதைவிட, தி.மு.க. நிர்வாகிகளை சந்திப்பதையே வேலையா வச்சிருக்காரு.

 

எங்க மா.செ முபாரக் ஆதரவாளரான நெல்லியா ளம் நகரச்செயலாளர் காசிலிங்கம், கேரளா வயநாடு சுல்தான் பத்தேரில இருக்கற ராபா ஆயுர்வேத ஆஸ்பத்திரியில முதுகு தண்டுவடப் பிரச்சினைக்கா அட்மிட் ஆகியிருப்பதை அறிந்து, அந்த ஆஸ்பத்தி ரிக்கே அ.தி.மு.க. சஜீவன் நேரில்போய் பார்த்து நலம் விசாரிச்சுட்டு வந்திருக்காரு. அ.தி.மு.க. தலைமை தனக்கு கொடுத்திருக்கிற தேர்தல் பொறுப்பாளர் பணியை வெற்றிகரமாக முடிக்க, தி.மு.க. நிர்வாகிகளின் ஒத்துழைப்பை சஜீவன் நாடுகிறார். அதற்காக என்ன செலவு செய்யவும் ரெடியாகிவிட்டார்.

 

நெல்லியாளம் நகராட்சியின் பல லட்சம் பெறுமானமுள்ள ரோடு காண்ட்ராக்ட், ஏற்கனவே பார்த்த காண்ட்ராக்ட் வேலைக்கான பென்டிங் பணம் 20 லட்சம்னு எல்லாமே க்ளீயராகுது. நீலகிரி தி.மு.க. வினரைப் புரிந்துகொண்டு சஜீவன் சாமர்த்தியமா வேலை பார்க்கிறார்'' என்கிறார் உண்மையாய்.

 

நாம் கேரளாவில் உள்ள ராபா ஆஸ்பிடலுக்கு நேரில் சென்று, சஜீவன்-காசிலிங்கம் சந்திப்பை உறுதிப்படுத்திக்கொண்டோம்.

 

நீலகிரி தி.மு.க.வினரிடம் பேசியபோது, "இதே நெல்லியாளம் நகராட்சியில ரோடு காண்ட்ராக்ட்டுக்கு நாங்க போய் நின்னபோது, எங்க எம்.எல்.ஏ. திராவிட மணி சப்போர்ட் பண்ணலை. அவர் சிபாரிசு லிஸ்ட்ல, அ.தி.மு.க. ஒப்பந்ததாரர்கள் பெயர் இருந்தது. ஆனா, நகராட்சியின் லேடி கமிஷனரோ, "இதில் உள்ள அ.தி.மு.க.காரங்க சாலைப்பணி செய்ய வர்ற பணியாளர்களுக்கு காப்பீட்டுத் தொகை கட்றதேயில்லை'ன்னு சொல் லிட்டாங்க. சஜீவன் தலையிட்டபோதும் லேடி கமிஷனர் உறுதியா மறுத்துட்டாங்க'' என்கிறார்கள்.

 

தி.மு.கவினரின் தன்னிச்சையான போக்குகளால் தொகுதி எம்.பி. ஆ.ராசா கோபப்பட்டதையும் உடன்பிறப்புகள் விளக்கினார்கள். "இங்கே காந்தல்னு ஒரு ஊர் இருக்கு. அங்கே உள்ள 7 வார்டுகள்லயும் சாக்கடை வசதி சரியா இல்லைனு ஆ.ராசாகிட்ட ஊர்வாசிகள் புகார் கொடுத்தாங்க. அவரும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 லட்ச ரூபாய் கொடுத்தாரு. அவர் பி.ஏ. அந்த பொறுப்பை தலைமை செயற்குழு உறுப்பினர் ரவிக்குமார்கிட்ட கொடுத்துட்டாரு. வேலை ஏனோதானோன்னு பெயரளவுக்கு மட்டுமே நடந்தது.

 

ஆ.ராசா ஊட்டிக்கு வந்ததை தெரிஞ்சுகிட்ட காந்தல் பகுதி மக்கள் அவரைச் சந்திச்சு ரவிக்குமார் பண்ணினதை சொல்லிட்டாங்க. இதுபோன்ற தொடர் செயல்பாடு களால் நீலகிரி மாவட்ட தி.மு.க. தள்ளாடுவதை தெரிஞ்சிக்கிட்ட ராசா, நிர்வாகிகளையும் பி.ஏ.வையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாரு. காந்தல் மக்களின் பிரச்சினைகளை சரிசெய்ய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 23 லட்சத்தை எடுத்துக் கொடுத்திருக் காரு. அவர் மேற்பார்வையிலேயே அதிதீவிரமாக வேலைகள் நடந்துட்டு இருக்கு'' என்றனர்.

 

"நேரடிக் கண்காணிப்பு இல்லாவிட்டால், சஜீவன் போன்ற வெயிட்டான அ.தி.மு.க ஆட்களிடம் சிக்கிக்கொள்ளும் நீலகிரி தி.மு.க. நிர்வாகிகள் போல, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் சாதி -பணம் -டெண்டர் -பர்சன்டேஜ் என பல வகைகளில் அ.தி.மு.க.வுடன் அண்டர்ஸ்டாண்டிங்கில் இருக்கிறார்கள்.

 

கடந்த 2016 தேர்தலில் மேற்கு பகுதியில் நீலகிரி மாவட்டம் மட்டுமே தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. அங்கேயே இத்தகைய நிலை என்றால், எடப்பாடி பழனிச்சாமியின் சமூகம் நிறைந்துள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தி.மு.க. நிர்வாகிகளின் ஆளுந்தரப்புடனான அண்டர்ஸ்டாண்டிங் அரசியல் அதீத அளவில் உள்ளது'' என்கிறார்கள் அடிமட்டத் தொண்டர்கள்.

 

பலன் எதிர்பாராத தொண்டர்களின் உழைப்பிலும்- கச்சிதமாக வியூகம் வகுத்து தலைமை மேற்கொள்ளும் செயல்களாலும் தி.மு.க.வுக்கு விளையக்கூடிய வெற்றியை, சஜீவன் போன்ற அ.தி.மு.க. புள்ளிகள் அறுவடை செய்வதை உடன் பிறப்புகளால் ஜீரணிக்க முடியவில்லை. அறிவாலயத் திற்குப் பலமுறை புகார்கள் சென்றாலும், அதிரடி நடவடிக்கை எடுப்பதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தயக்கம் காட்டுகிறார்'' என்பதே உடன்பிறப்புகளின் ஆதங்கமாக இருக்கிறது.

 

"உள்ளடி என்பது தி.மு.க.வில் நிரந்தர நோயாகப் பரவியுள்ளது. ஆபரேஷன் செய்யாமல் நோய் குணமாகாது. தவறினால், ஸ்டாலினின் உழைப்பும் வியூகமும் உரிய பலனைத் தராது' என்கிறார்கள் அடிமட்டத் தொண்டர்கள்.