திண்டுக்கல்லில் உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் வனத்துறை அமைச்சருமான சீனிவாசன் தலைமை தாங்கினார். இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசும்போது, “கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பொய்யான வாக்குறுதி கொடுத்து எப்படி வெற்றி பெற்றார்களோ, அதேபோன்று நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. தேர்தலின்போது அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. கெட்டிக்காரன் புளுகு, எட்டு நாள் மட்டுமே என்பது போல் நிரூபணமாகியுள்ளது.
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 தருவேன் என்றார்கள், தரவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள், செய்யப்படவில்லை. கூட்டுறவு சங்கத்தில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றார்கள், தள்ளுபடி செய்யப்படவில்லை. கழக ஆட்சியில் மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கிய திட்டத்தை ரத்து செய்ய தயாராகியுள்ளனர். அதேபோல் கழக ஆட்சியில் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் இன்னும் அது செயல்படுத்தப்படவில்லை. இவ்வாறு பொய்யான வாக்குறுதிகளைக் கூறி திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியோடு கழக ஆட்சியில் முதல்வரும், துணை முதல்வரும் எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக வழங்கியதை மக்கள் நன்கு அறிவார்கள்.
ஆனால், திமுக அரசு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இதுதான் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் உள்ள வித்தியாசம். வரக் கூடிய மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடக்கூடிய கழக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக பல போரட்டங்கள் நடத்தி ஆளுங்கட்சியை ஒரு கை பார்ப்போம்” என்று கூறினார். இதில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு சங்கத் தலைவர் பாரதி முருகன் உட்பட கழக நிர்வாகிகள் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர்.