கட்சியைவிட்டுச் செல்வது துரோகம் என தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல், தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக, முந்தைய தேர்தல்களில் பெற்ற வாக்குகளைவிடக் குறைந்த வாக்குகளையே பெற்றிருந்தது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக அண்மையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சித் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “உண்மை, உழைப்பு, நேர்மையை நம்பி நாம் தேர்தலை எதிர்கொண்டோம். அதிகார பலம், பணபலம் ஆகியவற்றை மீறித் தேர்தலில் நின்றோம். வெற்றி, தோல்வி சகஜம். நமக்கான காலம் நிச்சயம் வரும்” எனக் கூறியிருந்தார்.
இதனையடுத்து, தேமுதிகவிலிருந்து பல நிர்வாகிகள் வேறு கட்சிகளில் இணையும் போக்கு அதிகரித்துவந்தது. இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மூளைச்சலவை செய்வோரின் ஆசை வார்த்தைகளை நம்பி தேமுதிகவை விட்டுச் செல்வது கட்சிக்குச் செய்யும் துரோகம். கட்சியை விட்டுச் செல்பவர்கள் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பதை உணரும் நாள் வரும். எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான். அதற்காக தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லை என யார் நினைத்தாலும் அது தவறு. 100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.