தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில் தேர்தல் பரப்புரையைத் தொடங்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், ''நேர்மையானவர்களுக்கு வாக்களியுங்கள். சில கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களிப்பதிலிருந்து மீண்டுவாருங்கள். கிராமப்புறங்களின் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி ''எனப் பேசினார்.
நேற்று கமல்ஹாசன் அவருடைய டிவிட்டர் பக்கத்தில், 'பனைமரத்துப்பட்டி ஒன்றிய 9வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர்; உள்ளூர் திமுக பிரமுகரால் அச்சுறுத்தப்பட்டு வேட்புமனு திரும்பப் பெறப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை' எனப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.