சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற அலுவலர்களுடனான கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை குறித்து விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.
இந்நிலையில் அதற்குப் பதிலளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்பொழுது, 'அரசின் கவனத்திற்கு தார்மீக உரிமை அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் சில பிரச்சனைகளை அவரது கவனத்திற்கு கொண்டு சென்றார். ஆனால் உணவுத்துறை அமைச்சர் அதற்கு உரிய பதில் தெரிவித்திருக்கலாம் அல்லது உரிய நடவடிக்கைகளை எடுக்கிறோம், பரிசீலிக்கிறோம், கவனத்தில் கொள்கிறோம் என்று ஜனநாயக கடமையாற்றும் வகையில் தெரிவித்திருக்கலாம். ஆனால் அரைத்த மாவையே அரைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் சக்கரபாணி. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நெல்மணிகள் நனைவதாகவும், கால்நடைகள் உபயோகத்திற்குகூட பயன்படாத வகையில் அரிசி உள்ளதாக இந்திய உணவுக் கழகம் சான்றிதழ் அளித்துள்ளதாகவும் மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே புளித்துப் போகும் அளவிற்கு அவருடைய பதவிக்குப் பொருத்தம் இல்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.
நெல்லை பாதுகாப்பாக வைக்காததால் சுமார் 5,000 நெல் மூட்டைகளுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். எந்த ஊரில், எந்த இடத்தில் எவ்வளவு நெல் மூட்டைகள் நனைத்துள்ளது என்று கூட குறிப்பிடாமல் முன்னாள் முதல்வரும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஒருவர் அறிக்கை விடுவதை என்னவென்று சொல்வது' என சக்கரபாணி அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
திண்டுக்கல் திருமங்கலம், கப்பலூரில் இருக்கக்கூடிய நெல் சேமிப்பு கிடங்கு, நீங்கள் ஒரு மணி நேரத்தில் வர வேண்டிய தூரம்தான். வந்து பார்க்கலாம் எப்படி நெல் நனைத்திருக்கிறது என்று. எதிர்க்கட்சித் தலைவர் ஆதாரத்தோடு உண்மை நிலையைத்தான் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்'' என்றார்.