மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவரின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் மணமக்களை வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இருவரையும் சந்தித்து கட்சியை ஒருங்கிணைப்பேன் என சசிகலா கூறியுள்ளார். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் கழகம் முழுமையாக வெற்றி பெறும் என ஆரம்பத்தில் இருந்து நாங்கள் சொல்லி வருகிறோம். சாதாரண தொண்டன் கூட கழக விதிப்படி கழகத்தின் உச்சபட்ச பதவிக்கு போட்டியிடலாம். ஆனால், அவர்கள் விதிகளை மாற்றி 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் என்றும் 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்றும் கூறி அவர்கள் தான் சட்டத்தை திருத்தியுள்ளார்கள். அதைத்தான் கூடாது என்கிறோம். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கழகத்தின் சட்ட விதிப்படி கழகத்தை வழிநடத்தி மகத்தான வெற்றிகளை ஈட்டி தமிழகத்திலே ஆளும் உரிமையை பெற்ற கட்சி அதிமுக எனும் நிலையை உருவாக்கியுள்ளார்கள். அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
தொண்டர்கள் தேர்ந்தெடுத்தால் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவீர்களா என கேட்கிறார்கள். இது குறித்து ஏற்கனவே சொல்லிவிட்டேன். கழகத்தின் சட்ட விதிகளின் படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும், ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களது அட்டையை புதுப்பித்துக் கொள்வதற்கும் கழகத்தின் சட்டவிதி இருக்கிறது. அந்த விதிகளின் படி, இருக்கின்ற கிளைக் கழகங்கள் அத்தனைக்கும் புதிதாக உறுப்பினர் படிவங்கள் கொடுக்கப்பட வேண்டும். படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு அவை தலைமைக் கழகத்தில் கொடுக்கப்பட்ட பிறகு கழகத்தின் சட்ட விதிப்படி அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து கழகத்தின் அமைப்பு ரீதியிலான தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜனநாயக முறைப்படி அனைவரும் வாக்களித்து இத்தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அப்படிச் செய்தால் உறுதியாக அனைத்து கீழ் நிலையில் இருக்கும் தொண்டர்கள் முதற்கொண்டு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற சூழ்நிலை உருவாகும். அந்த சூழ்நிலைதான் எம்ஜிஆர் காலத்தில் இருந்து ஜெயலலிதா காலம் வரை இருந்தது. அதை மாற்றியுள்ளார்கள். மாற்றக்கூடாது என சொல்லியுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.