தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலை அடுத்து திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அதிமுக தன்னை அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக நிலைநிறுத்திக்கொண்டது. அதனையடுத்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று (14.06.2021) நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பி.எஸ். ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அண்மைக்காலமாக சசிகலா அதிமுகவை மீட்கப் போவதாக அடுத்தடுத்து ஆடியோக்கள் வரிசைகட்டி வந்த நிலையில், அவருடன் பேசிய நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். இந்தக் கூட்டத்தில், சசிகலா அதிமுகவைக் கைப்பற்ற முயற்சிப்பதாக தொலைபேசியில் உரையாடி வினோத நாடகத்தை அரங்கேற்றிவருவதாக தீர்மானங்கள் வெளியிடப்பட்டபட்டன. தீர்மானங்கள் வெளியிடப்பட்ட அடுத்த நொடியே கட்சியின் செய்தித்தொடர்பாளர் புகழேந்தி உட்பட சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய 15 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை வெளியிட்டனர்.
இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆனந்தன், ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பி.கே. சின்னசாமி ஆகியோர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியில் கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் புகழேந்தி, ''ஆணவம், திமிர் என இடி அமீனின் குணங்களை எனது அன்புக்குரிய நண்பர் எடப்பாடி பழனிசாமியிடம் பார்க்கிறேன். இடி அமீனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் வித்தியாசம் இல்லை. நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். பெரிய அளவில் பத்திரிகையாளர்களை ஊடகங்களை சந்தித்து பல விஷயங்களை வெளியே கொண்டு வர இருக்கிறேன். பார்ப்போம் பழனிசாமி, உங்களுக்கும் எனக்கும் என்ன என்பதைப் பார்ப்போம்'' என தெரிவித்தார்.