அதிமுக பொதுக்குழு கடந்த 23ம் தேதி வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூடியது. இதில் 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார். அதேபோல், இந்தப் பொதுக்குழுவில் பேசிய அனைத்து உறுப்பினர்களும் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ். பெயரை தவிர்த்தனர். இதுமட்டுமின்றி பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸ்க்கு எதிரான கோஷங்கள் எழுந்தன. மேலும், அதிமுக அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மகன் உசேன் அடுத்த பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை மாதம் 11ம் தேதி நடக்கும் எனத் தெரிவித்தார். அப்போது, கோபம் அடைந்த ஓ.பி.எஸ் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று இரவே ஓ.பி.எஸ் அணி டெல்லி புறப்பட்டு சென்றது. இந்நிலையில், ஓ.பி.எஸ் சார்பில் அவரது ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு ஆன்லைன் மூலம் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், “சட்ட விரோதமாக பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க முயற்சி நடக்கிறது. ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும். அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதற்கு நான் ஒப்புதல் வழங்கவில்லை. சட்டப்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் பொதுக்குழுவை கூட்டமுடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.