Skip to main content

''அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்...''-சி.வி.சண்முகம் பேட்டி

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

'' Former AIADMK coordinator OPS ... '' - CV Shanmugam interview



முரண், மோதல் என அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் கிளம்பி, கடைசியில் சலசலப்புடன் நேற்று வானகரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் நேற்று டெல்லி கிளம்பினார். ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி தரக்கூடாது என டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

 

ஓபிஎஸ்ஸின் மனுத்தாக்கலை தொடர்ந்து சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.அன்பழகன், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில் வெளியே வந்த அவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். சி.வி.சண்முகம் பேசுகையில், ''ஓபிஎஸ் பொதுக்குழு அறிவிப்பு மீது 5 குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். எப்பொழுதும் தலைமை கழகத்தில் நடைபெறும் கூட்டத்தில் ரவுடித்தனமாக பேசுவதைப்போல  பேசியிருக்கிறார். நாங்கள் அதைப்பற்றி பேசவில்லை. ஆனால் அவர் வைத்துள்ள 5 கேள்விகளுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். பொதுக்குழுவை யார் கூட்ட வேண்டும் என்ற அதிகாரம் கழக விதி எண் 19ல் சொல்லப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். தேவைக்கேற்ப பொதுக்குழுவைக் கூட்ட ஒருங்கிணைப்பாளருக்கும் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உண்டு.

 

'' Former AIADMK coordinator OPS ... '' - CV Shanmugam interview

 

மொத்தமுள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை நடத்த வேண்டும் என கோரிக்கைவைத்துக் கையெழுத்திட்டு தலைமை கழகத்தில் கொடுத்தால் மனு கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பொதுக்குழுவை கண்டிப்பாக நடத்த வேண்டும். எனவே பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் கூறியுள்ள கருத்து செல்லாது. 23 ஆம் தேதிவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த தற்பொழுது அதிமுகவின் பொருளாளராக இருக்கக் கூடிய ஓபிஎஸ்ஸும், அதிமுகவில் முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த தற்பொழுது தலைமை நிலையச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியும் 02.06.2022 அன்று கையெழுத்திட்டு கொடுத்ததை அடுத்து 23.06.2022 அன்று பொதுக்குழு நடந்தது. அப்பொழுது தெரியாமல் ஓபிஎஸ் கையெழுத்து போட்டுவிட்டாரா?. நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் காலகட்டத்தில் பொதுக்குழுவுக்கு தடை வேண்டும் என மனுத்தாக்கல் செய்தார்.  

 

இந்த வழக்கில் நீதிமன்றம் கொடுத்த அறிவுறுத்தலின் படி பொதுக்குழு நடைபெற்றது. உள்ளே மூன்று கார்களுக்கு மட்டும்தான் அனுமதி கொடுக்கப்பட்டது, ஓபிஎஸ், இபிஎஸ், அவைத்தலைவர் மற்றும் அவர்களின் பாதுகாப்பு வாகனங்கள். மற்றபடி நானாக இருந்தாலும் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் என அனைவரும் கார் பார்க்கிங்கில் இருந்து முறையாக அடையாள அட்டையை காட்டி உள்ளே நுழைந்து பொதுக்குழுவில் பங்கேற்றோம். ஆனால் வைத்தியலிங்கம் சொகுசாக ஓபிஎஸ் காரில் வந்து உள்ளே சென்று அடையாள அட்டையை கூட காட்டவில்லை. ஆனால் எங்களை பொறுத்தவரை பொதுக்குழு சட்டவிதிகளின் படி நடத்தப்பட்டுள்ளது'' என்றார். அப்பொழுது பின்னே நின்றுகொண்டிருந்த ஜெயக்குமார் ''மீறல் இல்லன்னு சொல்லுங்க'' என சொல்ல, ''எனவே இதில் எந்தவித சட்டவிதி மீறலும் இல்லை'' என்றார் சி.வி.சண்முகம்.  மேலும் பேசிய அவர், ''அவைத்தலைவரை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்துதான் நியமிக்க வேண்டும் என்று இல்லை. அதிமுக சட்டவிதி 19 -ல் பிரிவு ஐந்தில் தலைமை கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி தலைமைக்கழகத்தின் அவைத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். நேற்றே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் காலாவதியாகிவிட்டது. இனி ஓபிஎஸ் அதிமுகவின் பொருளாளர் மட்டுமே. இபிஎஸ் தலைமை நிலையச் செயலாளர்'' என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்