கவுன்சில் கூட்டங்களை ஆண்டுகளுக்கு மூன்று முறை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'கடந்த 6 ஆண்டுகளில் 2016 ஆம் ஆண்டு மட்டும் ஒரேமுறை மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டம் நடைபெற்றுள்ளது. ஒன்றிய- மாநிலங்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து கூட்டாட்சி உறவுகளை வலுப்படுத்த வேண்டும். எனவே மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டங்களை ஆண்டுகளுக்கு மூன்று முறை நடத்த வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த 13/06/2022 அன்று 'காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது. இது தொடர்பாக உரிய அறிவுரைகளை மத்திய ஜலசக்தி அமைச்சகத்திற்கு வழங்குமாறும்' வலியுறுத்தி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.