புதுச்சேரி மாநில அரசின் 14வது சட்டப்பேரவையின் 4வது சிறப்பு கூட்டத் தொடர் நேற்று (18.01.2021) நடைபெற்றது. நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. மேலும் எதிர்க் கட்சியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கு மூன்று மாதத்திற்கு கரோனா வரி விதிக்கப்பட்டது. இந்த வரியை குறைப்பதற்கு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். பின்னர் 2021ஆம் ஆண்டு புதுச்சேரி மதிப்பு கூடுதல் வரி திருத்தச் சட்ட முன்வரைவு திருத்தம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி முதல்வர் நாராயணசாமி தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது பேசிய அவர், "புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என 1987 முதல் புதுச்சேரி சட்டபேரவையில் பலமுறை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிதி நிலைமையைப் பொறுத்தவரை வரவு, செலவு திட்டத்தில் மத்திய அரசு 80% நிதியை வழங்கி வந்தது. அந்த நிதி தற்போது படிப்படியாக குறைக்கப்பட்டது. பின்னர் புதுச்சேரிக்கு தனிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்ட பிறகு 20% நிதி மட்டுமே வழங்கி வருகின்றனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டால் மட்டுமே மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படுவது போல 40% மானியம் கிடைக்கும். புதுச்சேரி மாநில அந்தஸ்து பெறுவதென்பது நிர்வாக ரீதியாகவும், நிதி அளவிலும் மிகவும் முக்கியமானதாக அமையும். மக்களால் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே நலத்திட்டங்களையும், புதுச்சேரிக்கான வளர்ச்சித் திட்டங்களையும் சிறப்பாக நிறைவேற்ற முடியும். புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசு, முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து புதுச்சேரி மாநிலத்திற்கு முழு மாநில அந்தஸ்து வழங்கும் தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் சபாநாயகர் நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது பேசிய அவர், "மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம், நிறைவுற்ற ஒப்பந்தம் மற்றும் விவசாயத் தேவைகள் சட்டம், வேளாண் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது.
இதுதவிர, வேளாண் சந்தை மாநில அரசின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால் மின்சாரம், நீர், உரம், இடுபொருட்கள் போன்றவற்றிற்கு மாநில அரசுகள் தற்போது வழங்கிவரும் மானியங்கள் தர இயலாத சூழல் ஏற்படும். மேலும் விவசாயம் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிடும். ஒருநாள் விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல் விவசாயிகள் மேலும் நஷ்டமடையும் நிலை ஏற்படும். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விவசாயிகள் அவர்களது உயிரையும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், நாட்டின் நலன் காக்கவும் டெல்லியில் குவிந்த விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆகவே மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்” என்றார்.
இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு உதவாத இந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என சட்டபேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்ட நகலை முதல்வர் நாராயணசாமி கிழித்து மத்திய அரசிற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை சபாநாயகர் சிவக்கொழுந்து நிறைவேற்றினார்.