தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி, செய்தித்துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதனையடுத்து விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள்.
பேரவையிலிருந்து வெளியே வந்த ஓபிஎஸ், வேலுமணி, செல்லூர் ராஜு, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் யாரும் எதிர்பாராத வகையில் கலைவாணர் அரங்குக்கு வெளியே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் பிற்பகல் 2.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். வெளியே வந்த ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''ஒரு பல்கலை கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயரை வைப்பது சாலச்சிறந்தது. இன்று அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைத்திருக்கிறார்கள். அந்த அண்ணாமலை பல்கலைக்கழகம் எவ்வளவு தாழ்ந்த நிலையில் நிதி பற்றாக்குறையில் இழுத்து மூட வேண்டிய சூழல் ஏற்பட்டபோது ஜெயலலிதா அண்ணாமலை பல்கலை கழகத்தையே காப்பாற்றினார். ஆனால் ஒரு பல்கலைக்கழகத்திற்கு அவருடைய பெயர் இருக்கக்கூடாது என்பதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இன்று திமுக அரசு எடுத்திருக்கக்கூடிய நடவடிக்கைகளை ஒட்டுமொத்த தமிழக மக்களும், மாணவர் சமுதாயமும் அதேபோல் அதிமுகவினரும் முழுமையாக திமுக அரசு எடுத்திருக்கும் நிலையை எதிர்க்கிறார்கள்'' என்றார்.