உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டு உள்ளது. அம்மாநிலத்தின் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 95 வேட்பாளர்களின் பெயர்கள் முதல்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம்,கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் அண்மையில் அறிவித்தது. மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல், மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. ஆளும் கட்சியான பாஜக அங்கு மீண்டும் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. யோகி ஆதித்யாநாத்தை முன்னிறுத்தி பாஜக தேர்தலை சந்திக்க உள்ளது.
அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தி தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என்று பேசப்பட்டன. இந்நிலையில், அவர் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி ஆதித்யநாத் மிகவும் வலுவாக இருக்கும் தொகுதியாகும். ஐந்து முறை கோரக்பூர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக வெற்றிபெற்று இவர் லோக்சபாவிற்கு சென்றுள்ளார். இதனால் வலுவான கோரக்பூர் தொகுதியை ஆதித்யநாத் தேர்வு செய்து இருக்கிறார்.
ஆதித்யநாத் சேர்த்து மொத்தமாக 95 வேட்பாளர்களின் பெயர்கள் முதல்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிரத்து தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் நடக்கும் 58 இடங்களில் 57 இடங்களுக்கும் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் 55 இடங்களில் 38 இடங்களுக்கும் பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பாஜகவில் இருந்து வரிசையாக 10 எம்.எல்.ஏ.க்கள் வெளியேறிய நிலையில் இந்த பட்டியல் முக்கியத்துவம் பெறுகிறது.