கவர்ச்சிகரமான அறிவிப்பு கவர்ச்சிகரமான பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சியை கைப்பற்றிய கட்சிதான் திமுக என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பை எட்டியுள்ளது. திமுக கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து நேற்று வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தியது.
இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என ஜெயலலிதா மடிக்கணினி திட்டத்தை கொண்டு வந்தார். ஒரு மடிக்கணினி 12 ஆயிரம் ரூபாய். தமிழ்நாட்டில் 53 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி கொடுத்து விஞ்ஞான கல்வி கொடுத்த அரசாங்கம் அதிமுக தான். அதையும் நிறுத்திவிட்டார்கள்.
ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என சொன்னார்கள். ஆட்சிக்கு வந்து இரு வருடம் ஆகிவிட்டது. ஏன் இன்னும் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. அதோடு 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் ஊர் ஊராக சென்று பேசினார். பிரச்சாரத்தில் அவர் பேசும்போது நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என சொன்னார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்துவிட்டது. இப்பொழுதாவது ரகசியத்தை சொல்லுங்கள். கவர்ச்சிகரமான அறிவிப்பு கவர்ச்சிகரமான பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சியை கைப்பற்றிய கட்சிதான் திமுக” எனக் கூறினார்.