''சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரில் உள்ள இருக்கையில்தான் அமர்ந்து இருந்தேன். அவர் டேபிளுக்கு மேலே பார்த்தால்தான் தெரிவேன். டேபிளுக்குக் கீழே பார்த்தால் எப்படி தெரிவேன்,'' என பரப்புரைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பேசினார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர், நரசிங்கபுரம் ஆகிய நகராட்சிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ புதன்கிழமை (பிப். 16) ஆத்தூரில் பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசியது: “ஆரவாரம், எழுச்சி, அன்பு, பாசம் ஆகியவை எப்போதும் இருக்கிறது. ஆனாலும் சேலம் மாவட்ட மக்களை நம்ப முடியாது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான் பரப்புரைக்கு வந்தபோது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வோம் என்று சொன்னீர்கள்.
ஆனால் 11 சட்டமன்ற தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே திமுகவை வெற்றி பெற வைத்தீர்கள். இது நியாயமாக தப்பு என்று தெரியவில்லையா? இந்த தப்பை மீண்டும் செய்வீர்களா? தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்களும் அதிகளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றி பெறச் செய்தனர். திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 9 மாத காலத்தில் கரோனா இரண்டாவது அலையின்போது மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லை. தடுப்பூசிகள் இல்லை. ஆக்சிஜன் வசதி இல்லை.
கடந்த ஆட்சியில் கரோனா விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் ஒரு கோடி தடுப்பூசி மட்டுமே செலுத்தினர். ஆனால் திமுக ஆட்சியில் 9 மாத காலத்தில் பத்து கோடி பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். கரோனா மூன்றாவது அலையை தடுத்து இருக்கிறோம். நாட்டிலேயே கரோனா மூன்றாவது அலை தடுப்புப் பணிகளில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
ஆட்சி அமைந்த முதல் மூன்று மாத காலம், கரோனா தடுப்புப் பணிகளுக்காக செலவு செய்தோம். கலைஞர் சொன்னது போல சொல்வதைத்தான் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம். கடந்த ஆட்சியில் 5.70 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதை பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம்.
குறிப்பாக கரோனா நிவாரணமாக இரண்டு தவணையாக 4000 ரூபாய், பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். விரைவில் குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும். கடந்த 9 மாத கால திமுக ஆட்சியின் சாதனைகளை கருத்தில் கொண்டு திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
ஆத்தூர் மக்களின் கோரிக்கைகளான பாதாள சாக்கடைத் திட்டம், சீரான குடிநீர், ஆத்தூர் வடக்கே பைபாஸ் சாலை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டி உள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு அத்திட்டப் பணிகள் தொடரும். எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவன் பட்டா இல்லாத இடத்தில் வீடு கட்டி கொடுத்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எடப்பாடி பழனிசாமியும், அவருடைய கூட்டாளிகளும் விரைவில் சிறைக்கு செல்வார்கள்.
சட்டமன்ற தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை சொல்லி பிரச்சாரம் செய்ததால் உதயநிதி ஸ்டாலினை காணவில்லை என எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த 9ம் தேதி நடந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் அவருக்கு எதிரில்தான் அமர்ந்து இருந்தேன். அவருக்கு தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி அவர்களே... நாற்காலிக்கு மேலே பாருங்கள். கீழே பார்த்தால் நான் தெரிய மாட்டேன். நான் உங்களை தவறாகச் சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்தை முடக்குவேன் என்று சொல்லி வருகிறார். நாங்கள் மக்களை சந்தித்து ஆட்சி அமைத்திருக்கிறோம். உங்களைப்போல கூவத்தூரில் இருந்து ஆட்சி அமைக்கவில்லை” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இதையடுத்து அவர் சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார்.