குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் ஜூலை 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இரு வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களைச் சந்தித்து ஆதரவு கோரிவரும் நிலையில், அண்மையில் யஷ்வந்த் சின்ஹா முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருந்தார்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க ஜூலை 17ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடுகிறது. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பங்குபெற அனைத்து திமுக எம்.எல்.ஏக்களுக்கும் கட்சியின் கொறடா கோவி. செழியன் அழைப்பு விடுத்துள்ளார்.