![tt](http://image.nakkheeran.in/cdn/farfuture/Gz7ZRQNaFYb1n7AgulDj3FBJR79FJTOr6XBkY9Rd2xI/1652442300/sites/default/files/inline-images/th_2286.jpg)
தி.மு.க-வின் உட்கட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது. வழக்கம் போல வாக்கெடுப்புகள் நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்வதை தவிர்ந்து தேர்தல் ஆணையர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வேட்பு மனு பெற்று நிர்வாகிகளை தேர்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை நகரத்திற்கான நிர்வாகிகள் தேர்வுக்காக தேர்தல் ஆணையராக கே.எஸ்.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக மண்டல பொறுப்பாளர்கள் கவனத்திற்கு அக்கட்சியினர் கொண்டு சென்றுள்ளனர். மேலும், முதலமைச்சரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை நகரச் செயலாளர் நைனா முகமது, முன்னாள் நகரச் செயலாளரும், விவசாய தொழிலாளர் அணி மாநில துணைச் செயலாளருமான அரு.வீரமணி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுப.சரவணன், நெசவாளர் அணி எம்.எம்.பாலு மற்றும் பலர் சந்தித்து புகார் மனுவும் கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில், நாங்கள் ஒரே அணியாக நின்று நிர்வாகிகள் தேர்தலை சந்திக்கும் நிலையில், தேர்தல் ஆணையராக வந்த கே.எஸ்.ரவிச்சந்திரன் எங்கள் பலத்தை கணக்கில் எடுக்காமல் எங்கள் அணியைவிட 5 வாக்குகள் குறைவாக உள்ள மாவட்டப் பொருளாளர் செந்தில் அணியை சேர்ந்தவர்களை மட்டும் சந்தித்து தலைமைக்கு அறிக்கை கொடுத்துள்ளார்.
அதாவது செந்தில் தற்போது நகரப் பொருளாளராக உள்ளார். அவரது மனைவி திலகவதி நகர்மன்றத் தலைவியாகவும், அவரது மகன் நகர இளைஞரணி செயலாளராகவும் உள்ள நிலையில், செந்தில் அவர்களையே நகரச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. ஆகவே எங்கள் அணியில் உள்ள ஒருவரை நகரச் செயலாளர் ஆகவும், மற்ற நகரப் பதவிகளை இரு அணிகளில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். மேலும் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நகரச் செயலாளர் நைனா முகமது தனது முகநூல் பக்கத்தில் 'விடை பெறுகிறேன்' என்று பதிவிட்டுள்ளது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மற்றொரு பக்கம் தலைமையின் அறிவிப்பு வெளியாகாத நிலையில் 'நகரச் செயலாளர் செந்தில்' என்று பதாகை வைப்பதும் சால்வை போடும் நிகழ்வுகளும் தொடங்கியுள்ளதால் புதுக்கோட்டை திமுகவினரிடையே குழப்ப நிலை நீடித்துவருகிறது.