தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஐ.பெரியசாமி வெற்றி பெற்றுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியாகின. இதில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஐ.பெரியசாமி மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் மட்டுமல்லாமல், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்திருக்கிறார்.
திமுக மாநில துணைப் பொதுச் செயலாளராக உள்ள பெரியசாமி, முதல்முறையாக 1989ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பின் 1991ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார். மீண்டும் 1996ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். அதன்பின் 2001இல் மீண்டும் தோல்வி அடைந்தார். அதன்பிறகு 2006, 2011, 2016ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்றார். இந்த முறையும் இதே தொகுதியில் போட்டியிட்டு ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 850 ஓட்டுகள் பெற்றார்.
அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமா 30 ஆயிரத்து 238 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார். அந்தளவுக்கு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 577 வாக்குகள் கூடுதலாக வாங்கியுள்ளார் ஐ.பெரியசாமி. இதன் மூலம் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் என்ற பெருமையைப் பெற்றதோடு மட்டுமில்லாமல், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமா உட்பட 19 வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்துள்ளார். இதன் மூலம் தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் சாதனையும் படைத்துள்ளார் கழக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி.