Skip to main content

தேமுதிக கொடிநாள் : தொண்டர்களுக்கு விஜயகாந்த் வாழ்த்து

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

 

vijayakanth



தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த், தனது கட்சித் தொண்டர்களுக்கு தேமுதிக கொடிநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 


    புரட்சிகலைஞர் விஜயகாந்த் ரசிகர் மன்றம் அமைத்து, அதன் மூலம் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து, நமது ரசிகர் மன்றம் எல்லா தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் நற்பணி இயக்கமாக செயல்பட்டு வந்த வேளையில், தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க 2000 ஆம் ஆண்டு புரட்சிதீபம் தாங்கிய மூவர்ண கொடியை, ரசிகர் நற்பணி மன்றத்திற்காக பிப்ரவரி 12 ஆம் நாள் நான் அறிமுகபடுத்தினேன். இந்த கொடியை தமிழகம் முழுவதும், பட்டி தொட்டி எங்கும் பறக்கவிட்டு சாதனை நிகழ்த்தியது நமது ரசிகர் நற்பணி மன்றங்களும், அதன்பிறகு கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் தான் என்பதில் பெருமைகொள்கிறேன். 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் செப்டம்பர் 14 ஆம் தேதி உதயமானபோது, நமது நற்பணி மன்ற கொடி கழக கொடியாக மாற்றப்பட்டது. எதோ மூன்று வர்ணங்களை கொண்டு உருவாக்கப்பட்டது மட்டும் அல்ல நமது கழக கொடி. அந்த வர்ணங்களுக்கு பிறகு நமது கழகத்தின் கொள்கையும், தமிழகத்தில் நிகழவேண்டிய மாற்றத்தையும் குறிப்பதாகும்.
 

சிகப்பு நிறம்-: 
 

    இந்த வர்ணம் எதை குறிக்கிறது என்றால் சாதி, மதம், இனம், மொழி என்று எல்லா பேதங்களுக்கும் அப்பாற்பட்டு நாம் அனைவரும் இரத்தத்தால் ஒன்று பட்டவர்கள், ஒன்றே குலம், ஒரே இனம் என்பதை வலியுறுத்தும் நிறம் ஆகும்.
 

மஞ்சள் நிறம்-:
 

    வளமான தமிழகத்தை உருவாக்கி அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி வறுமை கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை நிரூபித்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்று வளமான தமிழகத்தை மங்களகரமாக உருவாக்குவதே மஞ்சள் நிறம் ஆகும்.
 

கருமை நிறம்-:
 

    வறுமை, இலஞ்சம், ஊழல் என்ற இருள் தமிழகத்தை சூழ்ந்துள்ளதை குறிக்கும் நிறமே கருப்பு ஆகும்.
 

புரட்சிதீபம்-:
 

    மூவர்ண கொடியின் மையத்தில் அமைந்துள்ள புரட்சி தீபம் தமிழகத்தில் உள்ள இருளை அகற்றி, மாற்றத்தை உருவாக்கி நல்லதொரு மக்களாட்சியை கொண்டு வந்து, புரட்சியை ஏற்படுத்தி தமிழகத்தை ஒளி மயமாக்குவோம் என்பதை குறிப்பதாகும். தமிழகத்தில் உள்ள நதிகளை இணைத்து, நீல புரட்சி ஏற்படுத்தி விவசாயத்தையும், தொழில்களையும் மேம்படுத்துவோம் என்பதை குறிப்பதாகும்.
 

எனவே தமிழக மக்களுக்காக உயர்ந்த எண்ணத்தோடு, இலட்சியத்தோடு உருவாக்கப்பட்டது நமது கழக கொடி. நமது கழக கொடி தமிழகம் முழுவதும் பட்டொளி வீசி பறந்து தமிழகத்தின் முக்கிய அடையாளமாக கருதப்பட்டு வருகிறது. எனவே தெய்வத்தின் ஆசிர்வாதத்தோடும், மக்களின் பேராதரவோடும், நம் கழகம் தமிழகத்தில் பல புரட்சிகளை நிகழ்த்த கழக தொண்டர்களும், பொதுமக்களும்  ஒன்றுபடுவோம். இந்த இனிய கொடி நாளில் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏழை, எளிய பொதுமக்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தும், தமிழகம் முழுவதும் பழைய கொடி கம்பங்களை புதுப்பிக்கவும், புதியதாக கொடி கம்பங்கள் உருவாக்கிடவும், இந்த இனிய கொடி நாளில் கழக தொண்டர்கள் அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“கூடாரத்தையே காலி செய்து விட்டார்கள்” - கடுமையாக விமர்சித்த பிரேமலதா!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Premalatha Vijayakanth who strongly criticized pmk in election field 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார். அப்போது அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 40 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதே நேரம் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று, தொகுதி ஒதுக்கீடு செய்யப்படாத புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி கலந்துகொள்ளவில்லை.

Premalatha Vijayakanth who strongly criticized pmk in election field 

இந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பேசுகையில், “ஜெயலலிதா இல்லாத சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி  சந்திக்கும் முதல் தேர்தல் இது. நான் தே.மு.தி.க. பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு, விஜயகாந்த் மறைந்த பிறகு முதல் முறையாக சந்திக்கும் பாரளுமன்ற தேர்தல் இது. நாங்கள் இருவரும் ராசியான வெற்றி கூட்டணியை வரும் காலத்தில் நிச்சயமாக சாதித்துக் காட்டுவோம். அ.தி.மு.க.வும் - தே.மு.தி.கவும் மக்களுக்கு ஒரு சிறந்த அடையாளமான கட்சியாக விளங்குகிறது. அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும்.

இரண்டு நாட்கள் வரைக்கும் கூட்டணியில் இருக்கின்றோம் இருக்கின்றோம் என நாடகம் நடத்தியவர்கள் எல்லாம், தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடனே துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று கூடாரத்தையே கிளப்பி வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிட்டார்கள். ஆனால் தே.மு.தி.க. அப்படி கிடையாது. ஒரு வார்த்தை சொன்னால் அந்த வார்த்தையில் உறுதியாக இருப்போம். நம்பிக்கையாக இருப்போம். ஏனென்றால், எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். கொங்கு மண்டலக்காரர்கள் மரியாதை மிக்கவர்கள். அன்பானவர்கள். அதே போல நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் என ஒவ்வொரு முறையும் நிரூபித்து காட்டுகிறார். ஒரு வார்த்தை சொன்னால் சொன்னது தான். துளசி வாசம் மாறலாம். தவசி வார்த்தை மாறியதாக வரலாறு கிடையாது. என்ன நடந்தாலும் அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க. இருக்கும் என உறுதி கொடுத்தேன்” எனப் பேசினார்.