Skip to main content

கட்சியின் கொடியை ஏற்றிய கமல் - உயர்நிலைக் குழு கலைப்பதாக அறிவிப்பு

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது. காலை 11 மணி அளவில் மேடைக்கு வந்த கமல், கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அதன் பிறகு தொடர்ந்து அவர் பேசுகையில், “கட்சியின் உயர்நிலைக்குழு கலைக்கப்பட்டு புதிய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவித்தார்.

 

 

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசனும், துணைத் தலைவராக பேராசிரியர் கு.ஞானசம்பந்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர். செயலாளராக அருணாச்சலம், பொருளாளராக சுகா என்ற சுரேஷ், செயற்குழு உறுப்பினர்களாக ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ண குமார், குமாரவேல், மவுரியா, மூர்த்தி, ஆர்.ரங்கராஜன், சவுரி ராஜன், தங்கவேலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

இன்று நம் அனைவருக்கும் மிக முக்கியமான நாள். மாற்றத்தை நோக்கிய நமது பயணத்தின் மிக முக்கிய மைல் கல்லாக நமது மக்கள் நீதி மய்யம் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு தற்காலிகமாக அமைக்கப்பட்ட நமது உயர்நிலைக் குழு கலைக்கப்படுகிறது.
 

 

 

அக்குழுவில் சிறப்பாக தன்னலம் பாராமல் பணியாற்றிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிக்காக உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு, உள்ளச்சுத்தியுடன் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் நமது உயர்நிலைக் குழு உறுப்பினர்களான ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார், சி.கே.குமர வேல், ஏ.ஜி.மவுரியா, எஸ். மூர்த்தி, ஆர்.ரங்கராஜன், சவுரிராஜன், ஆர்.தங்கவேல் ஆகியோர் இனி மக்கள் சேவையை மகத்தாக செய்து முடிப்பதற்கு ஏற்ப மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக இன்று முதல் செயல்படத் தொடங்கி கட்சியினை வழி நடத்துவார்கள். தொண்டர்களும், மற்ற நிர்வாகிகளும் இவர்களுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.
 

மக்கள் நீதி மய்யம் கட்சி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. 2 தொகுதிக்கு ஒரு பொறுப்பாளரும், தொகுதி வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார விவரம் வெளியீடு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Kamal Haasan election campaign details release

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். மேலும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை வண்ணாங்கோயில் என்ற இடத்தில் பரப்புரையை தொடங்க உள்ளார்.

இந்நிலையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏபரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

‘2 நாட்களில் நல்ல செய்தியுடன் சந்திக்கிறேன்’ - கமல்ஹாசன்

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Meet you with good news in 2 days Kamal Haasan

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அதே சமயம் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 2 இடங்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என தகவல் வெளியாகி இருந்தது. அதாவது தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தகவல் வெளியாக வாய்ப்புள்ளது என கூறப்பட்டது. அதன்படி காங்கிரசின் கை சின்னத்தில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் ‘தக் லைப்’ (THUG LIFE) படத்தின் முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (19.02.2024) காலை சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை (செய்தியாளர்களை) சந்திக்கிறேன். இப்போதைக்கு இது தான் செய்தி. வெளிநாட்டில் இருந்து செய்தியை கொண்டு வரவில்லை. கட்சியினருடன் பேசிவிட்டு 2 நாட்களில் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறேன். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நன்றாக நடந்து கொண்டிருக்கின்றது” எனத் தெரிவித்தார்.