Skip to main content

''கல்யாணம் வேணாம்னு கேஸ் போட்டுட்டு காலையில் நான்தான் அட்சதை தூவுவேன் என்றால் விடுவார்களா?''-சி.வி.சண்முகம் ஆவேசம்!  

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

CV Shanmugam is furious!

 

முரண், மோதல் என அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் கிளம்பி, கடைசியில் சலசலப்புடன் நேற்று வானகரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் நேற்று டெல்லி கிளம்பினார். ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி தரக்கூடாது என டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

 

admk

 

ஓபிஎஸ்ஸின் மனுத்தாக்கலை தொடர்ந்து சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.அன்பழகன், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில் வெளியே வந்த அவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். சி.வி.சண்முகம் பேசுகையில், ''ஓபிஎஸ் பொதுக்குழு அறிவிப்பு மீது 5 குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். எப்பொழுதும் தலைமை கழகத்தில் நடைபெறும் கூட்டத்தில் ரவுடித்தனமாக பேசுவதைப்போல  பேசியிருக்கிறார். நாங்கள் அதைப்பற்றி பேசவில்லை. ஆனால் அவர் வைத்துள்ள 5 கேள்விகளுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். பொதுக்குழுவை யார் கூட்ட வேண்டும் என்ற அதிகாரம் கழக விதி எண் 19ல் சொல்லப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். தேவைக்கேற்ப பொதுக்குழுவைக் கூட்ட ஒருங்கிணைப்பாளருக்கும் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உண்டு. நேற்றே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் காலாவதியாகிவிட்டது. இனி ஓபிஎஸ் அதிமுகவின் பொருளாளர் மட்டுமே. இபிஎஸ் தலைமை நிலையச் செயலாளர்'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர்கள் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சி.வி.சண்முகம், ''கல்யாணம் வேணாம்னு வழக்குப்போட்டு விடிய விடிய வாதாடிவிட்டு காலையில் கல்யாணத்திற்கு வந்து நான்தான் அட்சதை தூவுவேன் என்றால் விட்டுவிடுவார்களா? அது வருந்தத்தக்க நிகழ்வுதான் அதனை நியாயப்படுத்தவில்லை. மேடையிலிருந்த யாராவது அவரிடம் தரக்குறைவாகவோ  அல்லது மரியாதைக் குறைவாகவோ நடந்துகொண்டார்களா?'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்