திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி எம்.எல்.ஏவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபிலின் உதவியாளர் பிரகாசம் மீது தொடர்ச்சியாக மோசடி புகார்கள் கிளம்பிய வண்ணம் உள்ளன. கடந்த வாரம் ஒரு பெண் தனது கைக்குழந்தை மற்றும் கணவர், அம்மாவுடன் வந்து 15 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டதாக புகார் தர வந்துயிருந்தார். புகார் தராதீர்கள் பணத்தை திருப்பி தந்துவிடுகிறோம் என அமைச்சரின் சார்பில் சில நிர்வாகிகள் வந்து பேச காவல்நிலையத்துக்கு வந்துவிட்டு அந்த பெண் திரும்பி சென்றுவிட்டார்.
இந்நிலையில் அதே வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் ஆன்லைனில் புகார் அளித்துள்ளர். அந்த புகாரில், “கூட்டுறவு துறையில் நியாய விலைக்கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி 2018ல் 5 லட்ச ரூபாய் பணம் வாங்கினார். ஆனால் இப்போது வரை அந்தப்பணத்தை திருப்பி தரவில்லை. 2021 ஏப்ரல் 18 ஆம் தேதி பணம் தருவதாக கூறி அமைச்சர் வீட்டுக்கு வரச்சொன்னார் பிரகாசம். அங்கே சென்ற என்னையும், என் அண்ணனையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார் பிரகாசம். அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என ஆன்லைன் வழியாக திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையிடம் புகார் தந்துள்ளார்.
தொடர்ச்சியாக அமைச்சர் நிலோபர்கபிலை மையப்படுத்தி மோசடி புகார்கள் வருவது அதிமுகவினரையும், அதிமுக தலைமையையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.