மேற்கு வங்க அமைச்சர்கள் இருவரை அதிரடியாக இன்று (17.5.21) கைது செய்திருக்கிறார்கள் மத்திய மோடி அரசின் சி.பி.ஐ. அதிகாரிகள். இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து சி.பி.ஐ. அலுவலகத்தில் போர்க்குரல் உயர்த்தியிருக்கிறார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்க தேர்தலில் மம்தாவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தலைவர்கள் எவ்வளவோ போராடிப் பார்த்தனர். ஆனால், முந்தைய தேர்தலைவிட அதிக இடங்களில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தேடி தந்தனர் வங்காள மக்கள். மிக அரிதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் முதல்வரானார் மம்தா.
மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட தோல்வி பாஜகவினரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. கடந்த 2017-ல் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக நடந்த நாரதா ஸ்டிங் ஆப்ரேசனில், மம்தா கட்சியைச் சேர்ந்த சுப்ரதா முகர்ஜி, பிர்ஹத் ஹக்கீம், மதன் மித்ரா ஆகியோர் லஞ்சம் பெற்ற போது சிக்கினர். அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தற்போது மம்தாவின் அமைச்சரவையில் சுப்ரதா முகர்ஜி, பிர்ஹத் ஹகீம் இருவரும் அமைச்சர்களாக இருக்கின்றன. மதன் மித்ரா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்த நிலையில்தான், 2017-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மேற்கண்ட மூவரையும் இன்று அதிரடியாகக் கைது செய்திருக்கிறது சி.பி.ஐ. அவர்களைக் கைது செய்ய மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கரிடம் அனுமதி பெற்றுள்ளனர் சி.பி.ஐ. அதிகாரிகள்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களையும், எம்.எல்.ஏ. வையும் சி.பி.ஐ. கைது செய்துள்ள சம்பவம், தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே, தனது அமைச்சர்களையும் கட்சி எம்.எல்.ஏ.வையும் கைது செய்ததை அறிந்து கோபமான முதல்வர் மம்தா, தனது இல்லத்திலிருந்து கிளம்பி, சி.பி.ஐ. அலுவலகத்திற்குச் சென்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் குதித்தார். கட்சி தொண்டர்களும் சி.பி.ஐ. க்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் செய்த முதல்வர் மம்தா, “மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறது சி.பி.ஐ. மாநில அமைச்சர்களையும் எம்.எல்.ஏ.க்களையும் கைது செய்வதாக இருந்தால் சட்டமன்ற சபாநாயகரின் அனுமதியைப் பெற வேண்டும். சபாநாயகரின் அனுமதியைப் பெற வேண்டும் என்கிற சட்டத்தை உதாசீனப்படுத்தி விட்டு, ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று கைது செய்கிறீர்கள் என்றால், என்னையும் கைது செய்யுங்கள்” என்று சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஆக்ரோஷமாகக் குரல் எழுப்பினார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாகியுள்ள நிலையில், அமைச்சர்களை ஏன் கைது செய்தோம் என சி.பி.ஐ. ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. ஆனால், அந்த அறிக்கையை மாநில அரசு ஏற்கவில்லை. இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் வேகம் காட்டினர். இதனையறிந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சி.பி.ஐ. அலுவலகத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர்.
இதனால் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு கெடும் சூழல் உருவாவதாகவும், அதனைக் கட்டுக்குள் கொண்டு வர முதல்வர் முயற்சிக்க வேண்டும் என்றும் மம்தாவுக்கு உத்தரவுப் பிறப்பித்திருக்கிறார் கவர்னர். ஆனால், இதனைப் புறந்தள்ளிய மம்தா பானர்ஜி, தனது அமைச்சர்களையும் எம்.எல்.ஏ.வையும் சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொல்கத்தா காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். இதனால், மேற்கு வங்கத்தில் பதட்டமான சூழல் அதிகரித்துள்ளது.