Skip to main content

'வெங்கடாசலம் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும்'-வலியுறுத்தும் எடப்பாடி!

Published on 05/12/2021 | Edited on 05/12/2021

 

 'CBI should probe Venkatachalam's issue' - Edappadi insists!

 

கடந்த 2 ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் தலைமைச் செயலக காலனியில் உள்ள வீட்டில் முன்னாள் மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வேளச்சேரி போலீசார் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

கடந்த செப்.23 ஆம் தேதி ஆத்தூர் அருகே முன்னாள் மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர். அந்த சோதனையில் வெங்கடாசலம் வீட்டில் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தேரடி வீதியில் உள்ள வெங்கடாசலதிற்கு சொந்தமான வீட்டிலும் அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி லஞ்ச ஒழிப்பு போலீசார் செப்.23 ஆம் தேதி சோதனை நடத்தினர். அதேபோல் அவரது வங்கி லாக்கரில் சோதனை நடத்தப்பட்டிருந்தது. இந்த புகாரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 'CBI should probe Venkatachalam's issue' - Edappadi insists!

 

இந்நிலையில் முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ''சுமார் 35 ஆண்டுகளாக வனத்துறை அதிகாரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பொறுப்புகளில்  திறம்பட பணியாற்றிய வெங்கடாசலம் இதுபோன்ற கோழைத்தனமான முடிவுக்கு வருவதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை. வெங்கடாச்சலத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் சந்தேகப்படுகின்றனர். எனவே இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.