தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கர விழாவில் பங்கேற்பதற்கான யாத்திரையை துவக்கி வைப்பதற்காக மயிலாடுதுறை அடுத்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று வந்திருந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இயக்கத்தினரும், அரசியல்கட்சிகளும் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் பாஜக சார்பில் ஆளுநருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.
ஆளுநருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டி திமுக உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பொழுது ஆளுநர் ரவி சென்ற வாகனத்தின் மீது கல் எறியப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தில், 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் கான்வாய் வாகனங்கள் மீது கற்கள், கொடிகள், தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் தலையிட வேண்டும்' என தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.