''இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்" என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்த தமிழக அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் இது தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புரட்சிப் பாவலர் பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார். 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற கவிதைத் தொகுப்பில் வரும் 'இன்பத் தமிழ் எங்கள் உரிமைசெம் பயிருக்கு வேர்' என்ற வரியை கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் 'ழ'கரத்தை தங்கிய பெண் தாண்டவமாட, கீழே 'தமிழணங்கு' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் 'தமிழ் மொழிதான் இணைப்பு மொழி' எனவும் கூறியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்துக்கு சிலர் எதிர்வினையாற்றி வரும் நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெருக்கடி தருவதா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சீமான் தெரிவித்துள்ளதாவது, ''ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மதம், அரசியல் ரீதியாக நெருக்கடிகள் கொடுத்தால் கடும் எதிர்வினையைச் சந்திக்க நேரிடும். இந்தித் திணிப்புக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்து கருத்து கூறியதற்காக அச்சுறுத்தமுனைவது கண்டிக்கத்தக்கது. பாஜக வலுக்கட்டாயமாக இந்தியைத் திணிக்க முற்பட்டால் தமிழ் மண் மீண்டும் மொழிப்போரை நிகழ்த்திக் காட்டும். ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் பேரினத்தின் கலை அடையாளங்களுள் ஒருவர். உலகம் முழுவதும் அறியப்பட்ட பெரும் படைப்பாளி'' எனத் தெரிவித்துள்ளார்.