/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500_84.jpg)
இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட அரக்கோணத்தில் மது போதையில் நடந்த தகராறில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இதில் சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பாமக மீது சில அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகளை வீச, அதற்குப் பதில் கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!
அந்த அறிக்கையில், “இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட காவேரிப்பாக்கம் ஒன்றியம் சோகனூர் பகுதியில், இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதல்கள் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசாரணையும் மிகவும் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.
ஆனால், அரக்கோணம் படுகொலை விவகாரத்தில் உண்மைகள் அனைத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்ட சில சக்திகள், இந்த விஷயத்தில் வன்னியர்கள் மீதும், பாமகமீதும் அவதூறு பரப்பிக்கொண்டிருக்கின்றன.
மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை. அரக்கோணத்தில் இருவர் கொல்லப்பட்டதும் கண்டிக்கத்தக்கவையே. அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பா.ம.க.வின் நிலைப்பாடும் இதுதான்.
அரக்கோணம் அருகே இருவர் படுகொலை செய்யப்பட்டது உண்மை. அவர்கள் பட்டியலினத்தவர் என்பதும் உண்மை. இந்தப் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சிலர் வன்னியர் என்பதும் உண்மை. ஆனால், இந்தக் கொலைகளுக்கான காரணம் சாதியோ, தேர்தலோ அரசியலோ இல்லை என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. கொலையானவர்களும், கொலை செய்யப்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டவர்களும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்தவர்கள். கொலை நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு வரை அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில்தான் இந்தக் கொலை நிகழ்வு நடந்திருக்கிறது. இதுதான் மறுக்க முடியாத உண்மை.
இது குடிபோதையில் இருந்த இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதல். இதில் சாதி எங்கிருந்து வந்தது? கொல்லப்பட்டவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அல்ல. கொலை செய்ததாக கூறப்படுபவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியினரும் அல்ல. இன்னும் கேட்டால் கொல்லப்பட்ட இருவரும் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த மோதலின் பின்னணியில் அரசியல் இல்லை என்றும் அந்தக் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி கூறியிருக்கிறார். அவ்வாறு இருக்கும்போது இதில் அரசியல் எங்கிருந்து வந்தது?
அரக்கோணம் கொலைகளைக் கண்டிக்கும் உரிமை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. அது அவர்களின் கடமையும் கூட. எந்த ஒரு விஷயம் குறித்தும் கருத்து தெரிவிப்பதற்கு முன்பாக அதுகுறித்து நன்றாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதுதான் அரசியலில் அடிப்படை ஆகும். மாறாக, பகுத்தறிவை அடகு வைத்துவிட்டு, ஒரு சமுதாயத்தின் மீது பழி சுமத்துவது அரசியல் தலைவர்களுக்கு அழகல்ல. யாரோ தெருவில் செல்பவர்கள் பழி சுமத்துவதைப் போல அரசியல் தலைவர்களும் பழி சுமத்தக் கூடாது; அதன் மூலம் அரசியலில் தங்களின் தரத்தை தாங்களே தாழ்த்திக்கொள்ளக் கூடாது.
இனி வரும் காலங்களில் வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும்போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னிய மக்களைக் காக்கவும், அறிவுசார்ந்த பரப்புரைகளை மேற்கொள்ள வன்னியர் இன மான, உரிமை காப்பு அறிவுசார் பரப்புரை இயக்கம் தொடங்கப்படுகிறது. 22 வயது முதல் 30 வயது வரையுள்ள பட்டதாரி இளைஞர்களும், இளம் பெண்களும் இந்த இயக்கத்தில் சேரலாம். இந்த இயக்கத்தில் சேர விரும்புபவர்கள் www.bit.ly/HateFreeTN என்ற இணைப்பில் சென்று தங்களின் பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளலாம்.
இயக்கத்தின் நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த இயக்கத்தின் ஆலோசகர்களாக இருந்து வழிநடத்துவர். உண்மையைப் புதைத்துவிட்டோம் என்று எவரேனும் இறுமாப்பு கொண்டிருந்தால், புதைக்கப்பட்ட உண்மை முளைத்து வந்து சதிகாரர்களை வீழ்த்தும் என்பதற்கு இணங்க, வன்னியர்களுக்கு எதிரான அவதூறு பரப்புரைகளை முறியடித்து அவர்களின் இன மான, உரிமைகளைக் காக்க இந்த இயக்கம் பாடுபடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)