Skip to main content

“தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியே வர வேண்டும் என திருமாவளவன் முடிவு செய்துவிட்டார்” - அண்ணாமலை 

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

annamalai talk about vck and dmk alliance

 

தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியே வர வேண்டும் என திருமாவளவன் முடிவு செய்துவிட்டார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

 

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளை பா.ஜ.க தீர்த்துள்ளது. அதன் காரணமாக அந்த மாநில மக்கள் பா.ஜ.க விற்கு வாக்களித்துள்ளார்கள். காங்கிரஸின் கோட்டையாக இருந்த வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் முழுவதுமாக துடைக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி தான். பா.ஜ.க வில் அடிப்படையில் அனைவரும் உழைத்ததால்தான் இத்தகைய வெற்றி கிடைத்துள்ளது. அந்த மாதிரி காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் இல்லை. வழி நடத்த தலைவர்களும் இல்லை. அதுதான் அவர்கள் வீழ்ச்சி அடைய காரணம். ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம். 

 

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும். இந்த வெற்றி தி.மு.க வின் 23 மாத ஆட்சிக்கு மக்கள் கொடுத்த வெகுமதி அல்ல. 2024 ஆம் ஆண்டு தேர்தல் களம் முற்றிலும் வேறுபட்டது. பிரதமர் நரேந்திர மோடியை மையமாக வைத்தும் நடக்கும் தேர்தல். தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியே வர வேண்டும் என திருமாவளவன் முடிவு செய்துவிட்டார். ஒரு வாரமாக அவர் ஏன் பிதற்றுகிறார் எனத் தெரியவில்லை. பட்டியல் இன மக்கள் பா.ஜ.கவிற்கு அதிகமாக வருகிறார்கள். தி.மு.க வும், வி.சி.கவை கூட்டணியிலிருந்து வெளியேற்ற முடிவு செய்துவிட்டதை போல் தான் தெரிகிறது. அதற்கான ஆரம்ப கால அறிகுறிகள் தெரிகிறது. திருமாவளவன் கண் முன்னால் அவர் கோட்டை எனக் கூறப்படும் கடலூரில் பா.ஜ.க வளர்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம். யாரையும் அரவணைப்பது என் கடமையல்ல. 

 

2021க்கு முன்பு எப்படி இருந்தது என்பது எனக்கு தெரியாது. நான் தலைவராக பொறுப்பேற்ற பின்பு ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். ஒரு கட்சி இன்னொரு கட்சியை எப்படி நடத்த வேண்டும் என கூறினால் அது ஜனநாயகமாக இருக்காது.  நான் பா.ஜ.கவின் தலைவராக இருக்கும் வரை மற்ற கட்சியின் பிரச்சனையில் பா.ஜ.க தலையிடக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளேன். அ.தி.மு.கவில் பிரிந்திருப்பவர்களை இணைப்பது எங்கள் வேலை அல்ல. பிரதமர் மோடியை விஷ்வகுருவாக ஏற்றுக்கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம். கசாப்பு கடைக்கு செல்வதற்கு முன் ஆட்டை பிடித்து பார்த்தது போல் தான் உதயநிதி பிரதமரை சந்தித்தது. 

 

பத்தாண்டுகள் ஆட்சியிலிருந்த கட்சி தொடர்ந்து வெற்றி பெறும் என நினைப்பது தவறு. அரசுக்கு எதிரான மன நிலை மக்களுக்கு இருக்கும். அதனால் தான் அ.தி.மு.க 2021ல் தோல்வி அடைந்தது. காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் 2024லிருந்து 2026 வரை மிகப்பெரிய எழுச்சியாக இருக்கும். 2024 தேர்தல் பா.ஜ.கவிற்கானது. அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி தினமும் பா.ஜ.கவை விமர்சிக்கிறார்கள்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்