சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜி.பி.என். பேலஸில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (28/05/2022) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், பா.ம.க.வின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸை, ஜி.கே.மணி முன்மொழிய, பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்தனர். இதனால் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிகழ்வில் பேசிய அன்புமணி ராமதாஸ், ''என்னை பொருத்தவரை கட்சி நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் நேர்மையான முறையில் நீங்கள் செயல்பட வேண்டும். இது என்னுடைய அன்புக் கட்டளையாக எடுத்துக் கொள்ளுங்கள். காரணம் நம்ம கட்சி மற்ற கட்சிகளை போல் கிடையாது. ஒரு வித்தியாசமான கட்சி. ஒரு மாறுபட்ட கட்சி. அப்படி யாராவது தவறுதலாக செயல்பட்டார்கள் என்றால் நிச்சயமாக, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தாமதம் ஆகாது. ஏனென்றால் இதற்கு முன்பு எப்படி இருந்தீர்கள் என்று தெரியவே தெரியாது எனக்கு. இதன் பிறகு அனைத்து நிர்வாகிகளும் நேர்மையான முறையில் செயல்பட வேண்டும். 99 விழுக்காடு அல்ல நூறு விழுக்காடு எங்கேயுமே கட்ட பஞ்சாயத்து பிரச்சனை, ரவுடித்தனம் எதுவுமே இருக்கக்கூடாது.
ஒரு துளி அளவு கூட நம்ம கட்சியில் இருக்க கூடாது. தமிழ்நாட்டில் பல கட்சிகள் மக்களை பிரித்து அரசியல் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கட்சிகள் எல்லாம் மக்களை ஜாதி அடிப்படையில், மத அடிப்படையில், இன அடிப்படையில், மொழி அடிப்படையில் பிரித்து பார்க்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி மட்டும்தான் மக்களை இணைத்து செயல்பட்டு வருகிறது. வளர்ச்சி என்ற அடித்தளத்தில் வைத்து செயல்பட்டு வருகிறது. நம்முடைய நோக்கம் தமிழ்நாட்டின் நீடித்த வளர்ச்சி. பாட்டாளி மக்கள் கட்சியினுடைய கொள்கை சமூகநீதி, சமத்துவம், நீடித்த வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சுகாதாரம், விவசாயிகளுடைய முன்னேற்றம், வேலைவாய்ப்பு, தூய்மையான நிர்வாகம் இதுதான் நமது கட்சியினுடைய அடித்தள கொள்கை. அந்தக் கொள்கைகளை வைத்து தான் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கிறோம். நம் இயக்கத்திற்காக, தமிழக மக்களுக்காக நான் கடுமையாக உழைப்பேன். உங்கள் விருப்பப்படி 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி நடக்கும். அதற்கேற்ப நம்முடைய அரசியல் அணுகுமுறை வேறு விதமாக இருக்க 'பாட்டாளி மாடல்' வடிவமைத்துக் கொண்டிருக்கின்றோம்.
உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் ஜல்லிக்கட்டு காளையாக ஓடோடி வருவேன். அதற்கும் நான் தயங்க மாட்டேன். என்னை பற்றி உங்களுக்கு தெரியும். டீசன்ட் அண்ட் டெவலப்மெண்டல் பாலிடிக்ஸ் பேசுகின்ற இந்த அன்புமணி என்னுடைய தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு, சகோதர சகோதரிகளுக்கும் எந்த பிரச்சனை இருந்தாலும் அங்கே நிச்சயமாக நான் ஓடோடி வருவேன்'' என்றார்.