தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் இதுவரை எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா ஆகியோர் நியமிக்கப்படாத நிலையில், வரும் 14 ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்நிலையில், நேற்றுமுதலே (09.06.2021) ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் போஸ்டர் யுத்தம் நிகழ்ந்துவருகிறது. நெல்லை மாநகரில் நேற்று சர்ச்சையான போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. ஓ. பன்னீர்செல்வத்தை கலந்தாலோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. அவரை புறக்கணிக்கக் கூடாது என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் போஸ்டர்கள் இடம்பெற்றிருந்தன.
பெயர் குறிப்பிடாமல் அதிமுக மானூர் ஒன்றியம் என இந்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்த நிலையில், இது மற்ற கட்சியினரின் சதிச்செயல் என்று அதிமுகவினர் தெரிவித்துவந்தனர். அதைத் தொடர்ந்து, இன்று (10.06.2021) மற்றொரு போஸ்டர் மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டரில் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி என தெரிவித்து, முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ்-இன் புகைப்படத்தையும் போட்டுள்ளனர். ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். அவர்களின் அறிவுறுத்தல்படிதான் நடந்துகொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்தப் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.